

மதுரை மாவட்டத்தில் 2 லட்சம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட அட்சியர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு சவுராஷ்டிரா மகா சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் கபசுர குடிநீர் அருந்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவின் பேரில் பொதுமக்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சவுராஷ்டிரா மகா சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நேற்றும், இன்றும் மதுரை மாவட்டம் முழுவதும் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
மதுரை ஒத்தக்கடை, கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி போன்ற பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாருக்கும், மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் டிஎஸ்பி நல்லு, பயிற்சி டிஎஸ்பி பிரசன்னா, ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவன், ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி சரவணன், செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலர் கோபாலகிருஷ்ணன், சவுராஷ்டிரா மகா சபை தலைவர் ஆர்.கே.பாஸ்கர், வழக்கறிஞர் முத்துக்குமார், பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள் விமல், வைரமுத்து, முகாம்பிகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோபாலகிருஷ்ணன் கூறுகையில், மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டம் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சித்த மருந்தான கபசுர குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம். சுமார் 2 லட்சம் பேருக்கு இந்த குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.