

தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். அம்மா உணவகத்தில் தயார் செய்யப்பட்டிருந்த இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை அவர் உறுதி செய்தார்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மாநில அரசுகளும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வெளியே வந்தால் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வருகிறோம் என்ற பெயரில் மக்கள் பொது இடங்களுக்கு வந்து குவிவதும் அங்கு சமூக விலகலைக் கேள்விக்குறியாக்குவதாகவும் தொடர்குதையாகி வருகிறது.
இந்நிலையில், தேனி உழவர் சந்தையில் 18 வகையான காய்கறிகளை ரூ.150-க்கு வழங்கும் காய்கறி தொகுப்புப் பை திட்டம் உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு மதுரை மாநகராட்சியிலும் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து தற்போது வீடு தேடி மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் தேனியில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.
அத்துடன், உழவர் சந்தையில் ரூ.150க்கு காய்கறிகள் பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதையும் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் இதுவரை 234 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
தனித்திருத்தலும், சமூக விலகலும் மிகமிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டியது.