

கரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில், தனித்திருத்தலும் சுய சுகாதாரம் பேணுதலுமே இந்த நோய் வராமல் தடுப்பதற்கான வழி என்றாகிவிட்டது.
ஆனால், அதை விட பெரிய பிரச்சினையாக தற்போது வளர்ந்து இருப்பது வீட்டுக்குள் முடக்கப்பட்ட வாழ்வியல் முறையும் அதனால் ஏற்படும் மன அழுத்தமும்.
இதனால், அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக வெளிவரவும் பயமும் உள்ளது. அதேவேளையில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு வந்துவிடக் கூடாது என்ற பதற்றமும் உள்ளது.
இந்த இரட்டைச் சிக்கலுக்குள் தவித்து நிற்கும் மனநிலை தற்போது சாமானியன் முதல் வசதியானவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் உள்ளது.
தனக்கு நோய் வருமோ என்ற பயம், தன்னால் தன் குடும்பத்தினருக்கு வருமோ என்ற குற்ற உணர்வும், தான் சரியான பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கிறோமா என்ற குழப்பம் போன்றவை இந்த ‘கரோனா’ ஊரடங்கில் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்களை பெரும் மனஅழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது.
அதனால், சிலர் தற்கொலை முடிவு வரையும் சென்றுவிடுகின்றனர்.
புதுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட ஓர் இளைஞர் கடந்த வாரம் தூக்குப்போட்டு இறந்துவிட்டார். நேற்று மதுரையில் தனக்கு கொரோனா நோய் இருப்பதாக தவறான செய்தி ஊரெங்கும் பரப்படுவதாக அதிர்ச்சியான மனநிலையுடன் இருந்த ஒருவர் மதுரையில் ரயில் முன் பாய்ந்து இறந்தார்.
அதனால், மனநலனை ஆரோக்கியமாகவும், திடமாகவும் வைத்துக் கொள்ள தினசரி கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மதுரை அஹானா மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் விக்ரம் ராமசுப்பிரமணியன் கூறியதாவது:
நேற்று முன்தினம் எனது மருத்துவமனைக்கு ஒருவர் வந்தார். அவர் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர். ஆனால் அவருக்கு இருந்தது சாதாரன இருமல் – சளி. தெருவில் ஒருமுறை பலமாக இருமிய உடனே அருகில் இருந்த நண்பர் உனக்கு கரோனாவாக இருக்கலாம் தள்ளி நில் என்று விளையாட்டாகச் சொல்ல, அது அவரின் மனதை வெகுவாக பாதித்துவிட்டது.
5 நாட்களாக தூக்கம் இல்லாமல், யாரிடமும் பேசாமல், எல்லாரும் தன்னை நோயாளியாக நினைப்பதாக தனக்குள் கற்பைனையாக எண்ணிக்கொண்டு மனஅழுத்தம் அடைந்தார். பலர் மனநல மருத்துவரையும் அனுகாமல் அவர்களுக்குள்ளாகவே கவலைப்பட்டு மனநிலை பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய பேரிடர் காலங்களில் இருந்து மீள்வதற்கு மனத்திடம் மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்யுங்கள். உங்களை, உங்கள் குடும்பத்தின் தேவைகளை, எதிர்காலத் தேவைகளை மற்றும் எதிர்காலம் பற்றியதிட்டமிடல்களை செய்ய இது ஒரு சரியான வாய்ப்பு.
எப்போதும் போல் வழக்கமான நேரத்திற்கு எழுந்து பகல் பொழுதை முறையாக செலவிட திட்டமிடுங்கள். பகலில் உறங்குவதை தவிர்ப்பது நல்லது.
வீட்டிலேயே தினமும் உடற்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சி செய்யலாம். உங்கள் தொழில் அல்லது வேலை சார்ந்து அறிவை வளர்க்கும் புத்தகங்கள் படிக்கலாம்.
குடும்பத்தினருடன் அமர்ந்து பேசுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் பேசுவதைக் கேளுங்கள். தயவு செய்து குழந்தைகளை ஒழுங்குபடுத்துகிறேன் என்று அதிக கண்டிப்பு இந்த சமயத்தில் வேண்டாம். குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சிகளை கூட்டாக அமர்ந்து பாருங்கள். சமைத்தல், சுத்தம் செய்தல் வேலைகளை ஒருவரை மாற்றி ஒருவர் செய்யுங்கள்.
வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நம்பவேண்டாம். பரப்ப வேண்டாம். தனக்கு நோய் உள்ளதோ என்ற மனபயம் பதற்றம் இருந்தால் அருகில் உள்ள மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
தேவைப்பட்டால் மனநல மருத்துவரை தொடர்பு கொள்ளலாம். ஏற்கெனவே மனநல மருத்துவ சிகிச்சையில் இருப்போர் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுத்தமாக இருக்கிறேன் என்று திரும்ப திரும்ப கை கழுவதல் குளித்தல் தேவையில்லை. அதுவே மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். வெளியில் சென்று வந்தால் மட்டும் கழுவினால் போதுமானது.
எதிர்காலம் பற்றிய பயத்தை தவிருங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கரோனா வந்துவிட்டால் அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல் நோயாளிகளாக மட்டுமே பார்த்து அன்பு செலுத்துங்கள்.