

கண்ணுக்குத் தெரியாத கரோனா என்ற எதிரியை சமாளிக்க நாம் வீட்டுக்குள் மறைந்து இருப்பதுதான் விவேகம் என பொதுமக்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:
கரோனா என்ற பெயரில் இயற்கையின் கடும் கோபம் நமது வலிமையை சோதித்துப் பார்க்கிறது. இந்த சோதனையான காலகட்டத்தில் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை. கரோனாவை சரியாக மதிப்பிடாமல் போனதே வளர்ந்து நாடுகள் அதன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணற மூலகாரணம். இடம்பெயர்தலும், மற்றவர்களுடனான தொடர்புமே இந்த கொடிய வைரஸ் பரவ காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
கண்ணுக்குத் தெரியாத எதிரியை சமாளிக்க நாம் மறைந்து இருப்பதுதான் விவேகம் என சாணக்கியன் கூறியுள்ளார். அதுபோல கரோனா என்ற எதிரியை எதிர்கொள்ள நாம் வீட்டுக்குள் தனித்து இருப்பதுதான் விவேகம். இயற்கை மிகப்பெரிய பேரழிவை சந்தித்துவரும் இந்த நேரத்தில் நமக்கு நாமே லட்சுமண ரேகையை வரைந்து கொள்ள வேண்டும்.
எந்தக் காரணமும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். மரணத்தை தெரிந்தே தேடக்கூடாது. வெளியே நடமாடுவதன் மூலம் நமது பலத்தை இழந்து கரோனாவின் பலத்தை அதிகரித்து வருகிறோம். தனித்து இருப்பதை வெற்றிக்கான வாய்ப்பாக கருதி கரோனா பேரழிவை தடுக்க வேண்டும்.
நாட்டின் நலனுக்காவும் நம்மை நாம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மன உறுதியுடன் வீட்டில் இருப்பது பொறுமையை மட்டுமின்றி, வாழும் கலையையும் அதிகரிக்கும். மருந்து கண்டுபிடிப்பு இன்னும் முழுமையடையாத இந்த நேரத்தில், உங்களை நீங்களே வெற்றி கொள்வதுதான் சிறந்த வெற்றி. இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செல்போனில் முதல்வர் பேச்சு
கரோனா வைரஸ் தடுப்பு குறித்து செல்போன் வாயிலாக முதல்வர் பழனிசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார். குறிப்பிட்ட சில எண்களில் இருந்து பொதுமக்களுக்கு அழைப்பு வருகிறது. அதில் முதல்வர் பழனிசாமி பேசுகிறார். அவர் பேசுவதாவது:
வணக்கம். உங்கள் முதலமைச்சர் பழனிசாமி பேசுகிறேன். உலகெங்கும் தீவிரமாக பரவி வரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எங்களுக்கு முக்கியம். உங்கள் நலனை கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனவே, இந்த நோயை கட்டுப்படுத்த விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டிலேயே இருங்கள். நன்றி. இவ்வாறு அவரது பேச்சு ஒலிக்கிறது.