Last Updated : 02 Apr, 2020 07:51 AM

 

Published : 02 Apr 2020 07:51 AM
Last Updated : 02 Apr 2020 07:51 AM

வெறிச்சோடிய வீதிகள்; வேலையிழந்த திருநங்கைகள் அரசு உதவி பெறுவது எப்படி?

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளநிலையில், நிரந்தர பணியில் இருப்பவர்களுக்கு பாதி ஊதியமாவது உத்தரவாதமுள்ளது. அதேநேரத்தில் அன்றாடம் பிழைப்பு நடத்தும் திருநங்கைகள் வருமானமின்றி அவதிப்படுகிறார்கள். பெரும்பாலும் 10 முதல் 100 திருநங்கைகள் வரை ஒரே வீட்டில் இணைந்து வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கைதட்டிஇரவல் கேட்கும் நிலையில் இருப்பவர்கள். 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் இருக்கிறார்கள். 5 நாட்களில் தங்களது சேமிப்பு கரைந்துவிட்டதால், உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

இவர்கள் நிவாரண உதவிகளைப் பெறுவது எப்படி என்று உலக மாற்று பாலினத்தவருக்கான கூட்டமைப்பின் ஆசிய செயற்குழு உறுப்பினரான சிருஷ்டி கோபியிடம் கேட்டோம்.

“திருநங்கைகள் அதிகமாக வாழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், இதுவரையில் அவர்களுக்கு அரசு சார்பில் கரோனா நிவாரண உதவி எதுவும்கிடைக்கவில்லை. சமீபத்தில் மத்திய அரசின் சமூக நீதித்துறைஒரு அறிவிப்பை வெளியிட்டது. எங்களிடம் மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்த முழு விவரம் இல்லை.

எனவே, அவர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களையும், வங்கிகணக்கு எண்ணையும் தெரிவித்து என்னென்ன உதவிகள் தேவை என்பதையும் கூகுள் படிவம் வழியாக அரசிடம் பதிவு செய்துகொண்டால் அரசு உரிய உதவி செய்யும் என்று அறிவித்துள்ளது. இதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்க இடமில்லை, உணவில்லை என்பதுபோன்ற உடனடிஉதவிக்கு 9920879663 என்ற மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம். அருகில் உள்ள தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அவர்களுக்கு உதவி செய்யப்படும்” என்றார்.

மதுரை மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் சாந்தியிடம் இதுபற்றி கேட்டபோது, “40 வயதைக்கடந்த மாற்று பாலினத்தவர்களுக்கு அரசு மாதந்தோறும் ரூ.1000 நிதி வழங்கி வருகிறது. அதேபோல ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அரசு வழங்குகிற ரூ.1000நிதியையும், உணவு பொருட்களையும் வாங்கிக்கொள்வார்கள். தற்போது கரோனா பாதிப்பு காரணமாக, அரசு புதிய உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி, ரேஷன் கார்டுஇல்லாத மாற்று பாலினத்தவர்களும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதற்கான கடிதத்தை சமூகநலத்துறை சார்பில் அந்தந்தமாவட்ட வழங்கல் அலுவலரிடம் வழங்கியுள்ளோம். அது சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுவிடும் என்பதால், மாற்று பாலினத்தவர்கள் தாங்கள் வசிக்கிற பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலேயே பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x