

டெல்லி மாநாட்டில் பங்கேற்று, நாமக்கல் திரும்பிய 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வசிக்கும் வீதிகளுக்கு சீல் வைத்து, நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற மாநாட் டில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கலந்து கொண்டனர். அவர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 26 பேர் அடையாளம் காணப்பட்டு, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், நாமக்கல்லைச் சேர்ந்த 12 பேர், ராசிபுரத்தைச் சேர்ந்த 5 பேர், திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 18 பேரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப் பட்டனர்.
மேலும், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் அவர்கள் வசித்த வீதிகளில், வெளி ஆட்கள் யாரும் செல்ல முடியாத வகையில் சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர். மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே, நாமக்கல் லில், தனிமைப் படுத்தப்பட்டுள்ள வர்களின் வீடுகளைச் சுற்றி வசிப்போரின் உடல்நிலை குறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பணிகளை ஆட்சியர் மெகராஜ் ஆய்வு செய்தார். அவருடன் எஸ்பி அருளரசு, கோட்டாட்சியர் கோட்டைகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.