

மக்களுக்கு ஏற்படும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கண்டறிய, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் படுக்கை வசதியுடன் கூடியதனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் கரோனா பாதிப்புக்கு மருத்துவப் பரிசோதனை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதை ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு செய்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று வந்த818 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 25-க் கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
இவர்களில் யாருக்கும் கரோனா தொற்று அறிகுறி இல்லை. இருப்பினும், அவர்களின் ரத்தம், சளி மாதிரிசென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனையிலும் 285 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசு பாலிடெக்னிக், வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் கல்லூரி, ஆம்பூரில் தோல் விற்பனை மையம் ஆகிய இடங்களில் கூடுதலாக 200 படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக படுக்கைகளை சமூக ஆர்வலர்களும் அளித்து வருகின்றனர்’’ என்றார்.