Published : 24 Aug 2015 08:42 AM
Last Updated : 24 Aug 2015 08:42 AM

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள்: தமிழ் வளர்ச்சித் துறை நடத்துகிறது

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் அடுத்த மாதம் 1,2,4,5 தேதிகளில் நடத்தப்படுகின்றன.

கடந்த 2002-ம் ஆண்டு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளிகள்தோறும் தமிழ் மன்றம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் மத்தியில் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதன் பின், இத்திட்டம் கல்லூரி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.3000, ரூ.2000, ரூ.1000 என பரிசுகள் வழங்கப்பட்டன. மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இந்த போட்டிகளுக்கான பரிசுத் தொகையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான போட்டிகள் அடுத்த மாதம் நடத்தப்படுகின்றன.

இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘ தி இந்து’விடம் கூறியதாவது:

இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் செப்டம்பர் 1,2,4,5 தேதிகளில் நடத்தப்படுகின்றன.

மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில், முதல் இரு நாட்களில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், அடுத்த இரு நாட்களில் 14 மாவட்ட மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும்.

பரிசுத் தொகை உயர்வு

தற்போது இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும், பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.8000, ரூ.5000 எனவும், மாநில அளவில் முதல் 3 இடங்களுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் எனவும் பரிசு வழங்கப்படுகிறது.

வழக்கத்தை போல் இந்தாண்டும் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு இலக்கிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் பேச்சு, எழுத்து, கவிதைகளில் திருத்தம் செய்தல், செம்மைப்படுத்துதல் போன்றவையும் நடைபெறும். மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும் இதன் மூலம் கிடைக்கிறது.

பல்வேறு பணிகள்

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.3.70 கோடியில் சங்கத் தமிழ் வாழ்வியல் காட்சிக் கூடம் கட்டப்பட்டு வருகிறது. 1,750 நூல்கள் மின்னணுமயமாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x