

கரோனா வைரஸ் தொடர்பான இடர்மிகுந்த சூழலில் வாசகர்கள் பலரும் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இவற்றுக்குத் தீர்வு எங்கே கிடைக்கும் என்ற தடுமாற்றத்தையும் வெளியிட்டபடி இருக்கிறார்கள். அவர்களின் கேள்விகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நிபுணர்களிடம் கொண்டு சென்று உரிய பதிலைப் பெற்றுத் தர தயாராகிறது ‘இந்து தமிழ் திசை’! இதோ இங்கே அப்படி சில கேள்வி - பதில்கள்...
நான் திருநெல்வேலியில் வசிக்கிறேன். அண்மையில் சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். விதிகளின்படி அறுவை சிகிச்சை செய்துகொண்ட மருத்துவமனையில்தான் ஒவ்வொரு மாதமும் மாத்திரைகள் வாங்க வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் மாத்திரைகளை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே வாங்க முடியுமா?
ஸ்டான்லி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி எம்.ரமேஷ் கூறும் பதில்:
பொதுவாக எந்த அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதோ, அங்குதான் மாத்திரைகள் வழங்கப்படும். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மாத்திரைகள் வாங்கிக் கொள்ளலாம். மாத்திரை வழங்க மறுத்தால், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் செய்யலாம்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் 144 தடை உத்தரவு, ஏப்ரல் 14-ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் ரூ.1000 மாதாந்திர பாஸ் போன்றவை பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. எனவே, பேருந்து பாஸ்களுக்கான பணம் திருப்பி அளிக்கப்படுமா அல்லது தேதி நீட்டிக்கப்படுமா?
மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கோ.கணேசன் கூறும் பதில்:
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில்தான் தமிழக அரசு தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறது. இதையொட்டியே, பேருந்துகளின் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பி னும், ரூ.1000 பாஸ் எடுத்து வைத்திருப்பவர்கள் குறித்து போக்கு வரத்துத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென் றுள்ளோம். எனவே, பேருந்துகள் இயக்குவதற்கான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே இதுதொடர்பாக அறிவிப்பு வெளி யிடப்படும்.
வாசகர்களே…!
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் எதற்கு விதிவிலக்கு உண்டு; என்னென்ன செயல்களில் ஈடுபட அனுமதி கிடைக்கும்; எதனைச் செய்யலாம் அல்லது எதனைச் செய்யக் கூடாது என்பதில் உங்களுக்கும் இதுபோன்ற பல சந்தேகங்கள் இருக்கலாம். உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு கேள்வியாக அனுப்பினால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அல்லது நிபுணர்களின் பதில்களுடன் பிரசுரம் செய்யப்படும்.
இதுபோன்ற சந்தேகங்களை வாசகர்கள் press.release@hindutamil.co.in என்ற மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்பலாம். மேலும் 044-42890002 என்ற ‘உங்கள் குரல்’ எண் வழியாகவும் கேட்கலாம்.