Published : 01 Apr 2020 08:56 PM
Last Updated : 01 Apr 2020 08:56 PM

வெளியில் சுற்றும் வாகனங்களின் எண்களை சேகரிக்கும் போலீஸார்: விரைவில் நடவடிக்கை

சென்னையில் வெளியில் சுற்றும் வாகனங்களின் எண்களை போலீஸார் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சேகரிக்கின்றனர். இதன் மூலம் அனாவசியமாக வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை வரும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்த போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸாரின் கடும் நடவடிக்கை காரணமாக தினமும் ஆயிரக்கணக்கில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டம் 269, 270-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது, 188 ஐபிசி பிரிவுகளின் கீழும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போலீஸாரின் தொடர் நடவடிக்கை இருந்தாலும் காரணமின்றி ஊர் சுற்றி சமூக விலகலைப் புறக்கணிக்கும் நபர்களை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்கின்றனர். தமிழகத்தில் போலீஸ் தடை யுத்தரவு போடப்பட்டு வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தாலும் அத்துமீறுவோருக்கு ஆங்காங்கே போலீஸார் சிறு சிறு தண்டனை கொடுத்து அனுப்பி விடுகின்றனர். அப்படியும் மதிக்காமல் நடப்போரை போலீஸார் கைது செய்து விடுவிக்கின்றனர். வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர்.

இவ்வாறு ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 793 பேரை போலீஸார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். போக்குவரத்து போலீஸார் அபராதமாக ரூ.39 லட்சத்தை வசூலித்துள்ளனர், 85 ஆயிரத்து 850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது சென்னையில் போலீஸார் வெளியில் சுற்றும் வாகனங்களின் எண்களைக் கணக்கெடுத்து வருகின்றனர். சென்னையில் அனைத்து செக் போஸ்ட்டுகளிலும் இந்த எண்களைச் சேகரிக்கும் பணி நடக்கிறது. இதன் மூலம் சென்னையில் சுற்றித் திரிபவர்களின் வாகன எண்கள் சேகரிக்கப்படுகின்றன.

விரைவில் ஒற்றைப்படை எண்கள், இரட்டைப்படை எண்கள் என வாகனங்கள் எண்களைப் பிரித்து வெளியில் வருவதற்கான ஏற்பாடு, கலர்கள் நிறைந்த அடையாள அட்டைகள் மூலம் குறிப்பிட்ட நாளில் வெளியில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x