Published : 01 Apr 2020 07:16 PM
Last Updated : 01 Apr 2020 07:16 PM

கரோனாவால் முடங்கிப்போன மீன்பிடித் தொழில்: தமிழகத்தில் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு-  நிவாரணம் கோரும் மீனவர்கள்

ராமேசுவரத்தில் கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விசைப்படகுகள்

ராமேசுவரம்

கரோனாவால் மீன்பிடித் தொழில் முடங்கிப் போயிருப்பதால் மீனவர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தை சேர்ந்த விசைப்படகு மற்றும் இழுவைப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை என்று கடந்த மார்ச் 19-ம் தேதி மாலை முடிவு செய்தனர்.

மேலும் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை வயர்லெஸ் ரேடியோ மூலம் கரைக்கு உடனடியாகத் திரும்பும்படி அழைப்பு விடுத்தனர்.

மறுநாள் மார்ச் 20 முதல் தமிழக மீன்பிடி இறங்குதளங்கள், ஏலம் விடும் இடங்கள் எல்லாம் மூடப்பட்டன. மீனவர்கள் தங்களது படகுகளைப் பாதுகாப்பாக கரையோரங்களில் நிறுத்தி வைத்தனர்.

மேலும் தொடர்புடைய மீன் ஏற்றுமதியாளர்கள், ஐஸ் தொழிற்சாலைகள், கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட துணை தொழில்களும் முடங்கிப் போயுள்ளன.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழில் சார்ந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்லாதால் தினமும் ரூ.50 கோடி வரையிலுமான வர்த்தகமும் முடங்கியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் மீன்பிடித் தடைக்காலங்களில் வழங்கப்படும் நிவாரணம் வழங்கவேண்டும் அப்பொழுது தான் தாங்கள் பொருளாதார இழப்பில் இருந்து மீளமுடியும் என்றும் மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஐஸ் தொழிற்சாலைகள் எதுவும் இயங்காத நிலையில் மிகக் குறைந்தளவில் நாட்டுப் படகு மீனவா்கள் மட்டும் சுமார் 3 கடல் மைல் அளவு தூரம் வரையிலும் சென்று சென்று சிறிய ரக மீன்களைப் பிடித்து வருகின்றனா்.

இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களும் அந்தந்தப் பகுதிகளிலேயே விற்றுத்தீா்ந்து விடுகின்றது. இதனால் மீன் விலை வழக்கத்தை விட கூடுதலாக விற்கப்படுவதுடன் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்தோடு ஒப்பிடும் போது ரூ. 1000 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட. சீலா மீன் ரூ.500 அதிகரித்து ரூ.1,500-க்கும், விளா மீன், பாறை மீன் ஆகியவை ரூ. 400லிருந்து ரூ. 600க்கும், செந்நகரை, காரல் போன்ற மீன்கள் ரூ. 250லிருந்து ரூ. 400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x