

விழுப்புரத்தில் வாகன ஓட்டிகளை நிற்கவைத்து சங்கு ஊதி, பறை அடித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீஸாரை எஸ்.பி. எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 42 ஆயிரத்து 344 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறுவதைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, நகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 132 இருசக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 135 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 1,142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,160 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் நேற்று முன் தினம் மாலை இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பில் நிறுத்திய டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீஸார் கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்களை வரிசையாக நிற்கவைத்து இறந்தவரின் இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்படும் சங்கு, மேளம், பறை அடிப்பவர்களை வரவழைத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை சுற்றி அடிக்கச் செய்தார். இந்த நிகழ்வின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது.
இதனை அறிந்த எஸ்.பி.ஜெயக்குமார் "கரோனா தொற்று குணப்படுத்தக் கூடியதுதான். அதற்கு ஏன் இறுதி சடங்கில் பயன்படுத்தப்படும் சங்கு, பறை எல்லாம் கொண்டு மக்களை பீதிக்குள்ளாக்குகிறீர்கள் என கண்டிப்புடன் பேசி எச்சரித்து, கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதும்" என்றார்