

கரோனா வைரஸ் தொற்றுக்கும், கோழி இறைச்சி, முட்டை உண்பதற்கும் தொடர்பு இல்லை என மதுரை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெறவும்; கால்நடை, கோழி, முட்டை, மீன், இறைச்சி மற்றும் கால்நடை தீவனம், தீவன உற்பத்திப் பொருட்களின் நகர்வுகளுக்கும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்குமாறு தமிழக முதல்வர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடம் காணொலி மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, கோழி இறைச்சி, முட்டை மற்றும் கோழி உணவுப்பொருட்கள் சாப்பிடுவதால் கோவிட்-19 தொற்று நோய் பரவக்கூடும் என்ற தவறான செய்தியினை ஒரு பிரிவினர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கோழி முட்டை, இறைச்சி சாப்பிட தயக்கம் காட்டுகின்றனர்.
கோவிட்-19 நோய் மனிதனிடமிருந்து சுவாச குழாய் மூலம் தும்மல், சளி போன்றவற்றிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் படர்ந்துள்ள பொருட்களை தொடுவதால் மட்டுமே பெரும்பாலும் பரவுகிறது.
கோழி முட்டை, இறைச்சி மலிவான புரத உணவோடு, மனிதர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காரணியாகவும் உள்ளது. தற்போதைய சூழல் மனிதர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படும் காலகட்டமாகும்.
எனவே, கோழி முட்டை, இறைச்சி உண்பதன் மூலம் கோவிட்-19 பரவவில்லை. தவறான வதந்திகளை நம்பாமல், தயக்கமின்றி கோழி முட்டை மற்றும் இறைச்சியினை உட்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.