Published : 01 Apr 2020 06:49 PM
Last Updated : 01 Apr 2020 06:49 PM

கரோனா தடுப்பு; எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?- தமிழக அரசு விரிவான விளக்கம்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் நெருக்கடி கால மேலாண்மைக் குழு ஒன்று, வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழக அரசு கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நோய் மேலும் பரவுவதை தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நோய் பரவுவதைத் தடுக்க நோயின் அறிகுறி தென்பட்ட நபரின் வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலும் மேலும் கூடுதலாக 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மற்றும் அப்பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் நோயின் அறிகுறி தென்படுகிறதா எனத் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யவும், அந்நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், இந்திய ஆட்சிப் பணியிலுள்ள மூத்த அலுவலர்களின் தலைமையில் ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மேலும், இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், உணவு, உறைவிடம் கிடைப்பதை உறுதி செய்யவும்; முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் அனைவருக்கும் அத்தியாவசியத் தேவைகள் நிறைவு செய்யப்படுவதற்கும் இயங்குகின்றன.

அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் நெருக்கடி கால மேலாண்மை குழு ஒன்று, வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் வழிகாட்டுதலுக்கேற்ப, சமூக இடைவெளி, தரைத் தளங்கள் சுத்தம் செய்தல், கை சுத்தம், சுவாச சுத்தம் ஆகியவற்றை அனைவரும் கடைப்பிடிக்க வலியுறுத்தி விரிவான, தீவிரமான பரப்புரை நடவடிக்கைகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

உலக அளவில் அறியப்பட்ட, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இங்கிலாந்து பிரதம அமைச்சர் போரிஸ் ஜான்ஸன், மோனாக்கா நாட்டின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட், கனடா நாட்டு பிரதமரின் மனைவி மற்றும் ஸ்பெயின் நாட்டு பிரதமரின் மனைவி ஆகிய முக்கிய பிரமுகர்களும் இந்த கரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், முதல்வர், நாட்டு மக்களுக்கு அக்கறையுடன் விடுத்துள்ள வேண்டுகோளில் குறைந்தபட்சம் 3 அடி தூர இடைவெளியை ஒருவொருக்கொருவர் எல்லா இடங்களிலும் பின்பற்றிடவும், மேலும், இருமல், தும்மல், சளி தொல்லை, தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகளைக் கொண்ட நபர்களிடமிருந்து இந்த சமூக இடைவெளியைத் தவறாது பின்பற்றிடவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வரின் வேண்டுகோளின் படி, மக்கள் யாவரும் தங்களை பிறருடன் கலவாமல் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் நமது அன்பிற்குரிய மக்களை வேண்டுகிறோம்.

சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்ற மதம் சம்பந்தப்பட்ட மாநாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த 540 நபர்கள் பங்கேற்றது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 50 நபர்கள் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதர 300 நபர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் அறியப்பட இயலாமல் உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இதர நபர்களின் விவரங்கள் எதுவும் தெரியவரின், அது குறித்த விவரங்களை அருகாமையில் உள்ள உதவி மையத்திலோ அல்லது உரிய அரசு அலுவலர்களிடமோ தெரிவித்திட, தமிழக மக்கள் கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம், அவர்களையும் காப்பாற்றுவதோடு பிறரையும் இந்நோயின் கொடுமையான தாக்கத்திலிருந்து மீட்க இயலும்.

ஊரகப் பகுதிகளில், பொது இடங்களை மக்கள் நல்வாழ்வுத் துறையின் வழிமுறைகளின் படி, தூய்மைப்படுத்துதலும், கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளும் எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் (24/7) மேற்கொள்ளப்படுகின்றன.

அவற்றின் சிறப்புக் கூறுகள்:

மக்கள் அதிகமாக கூடும் கீழ்க்காணும் இடங்களை நாள்தோறும் துப்புரவு செய்தல்.

1. பொது விநியோக ரேஷன் கடைகள்

2. காய்கறி, இறைச்சி, மீன் அங்காடிகள் மற்றும் கடைகள்

3. பேருந்து முனையங்கள்

4. பொது நீர்த் தொட்டிகள், குழாய்கள்

5. பேருந்து நிறுத்தங்கள், நிழற்கூடங்கள்

6. ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள்

7. பால் சேகரிப்பு / விநியோக மையங்கள்

8. பல சரக்கு / மளிகைக் கடைகள்

9. வழிபாட்டுத் தலங்கள் - கோயில், மசூதி, தேவாலாயம் மற்றும் பிற

10.இன்ன பிற ஏனைய மக்கள் கூடும் இடங்கள்

* தனிநபர் பாதுகாப்புக் கவசங்களான முகமூடி, கையுறை, கிருமிநாசினி ஆகியன அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும், தூய்மைக் காவலர்களுக்கும், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கும் மற்றும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

* துப்புரவுப் பொருட்களான சோப்பு கரைசல், சோடியம் ஹைப்போ குளோரைட், வெளுப்பு காரம் மற்றும் கைகளைத் துப்புரவு செய்யும் கைகளுக்கான கிருமி நாசினி, கிரிசால் ஆகியன போதுமான அளவு கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கையிருப்பில் உள்ளது.

* கை கழுவுவதற்கான தண்ணீரும், சோப்பும் கூடிய கலன்கள் அனைத்து பொது இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இவை, அனைத்து ஊராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பொது விநியோகக் கடைகள், மக்கள் அதிகமாக கூடும் பிற அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளன.

* மக்களின் அடிப்படைத் தேவைகளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒளிரும் தெரு விளக்குகள், சாக்கடைகளை துப்புரவு செய்தல், குப்பைகளை சரிவர அகற்றுதல் ஆகிய பணிகள் சரிவர நடைபெறுதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இப்பணிகளை செயல்படுத்தும் பணியாளர்கள், பணியில் உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* பொதுகுழாய்கள், நீர்த் தொட்டிகள், பொது விநியோகக் கடைகள், அங்காடிகள், கடைகள், பேருந்து நிறுத்தங்கள், நிழற்கூடங்கள் ஆகிய பொதுமக்கள் கூடும் இடங்களில் போதுமான சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட தேவையான நடவடிக்கைகளை ஊராட்சிகள் எடுத்து வருகின்றன.

* விழாக்கள் நடத்துவதையும் மக்கள் திரளாகக் கூடுவதும் தவிர்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்ட விழாக்கள் எனில் குறைந்த, குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்கள் கூட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

* முதியோர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் நடவடிக்கைகளுக்கு வரவேண்டி இருப்பின் மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

* ஓய்வூதியம் பெறும் முதியோர்களும், மாற்றுத் திறனாளிகளும், பொருளாதார உதவி மற்றும் பிற உதவிகள் பெறுவது உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

* தங்களது வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்தல் அல்லது சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை லாபகரமான முறையில் மேற்கொண்டு வந்த விவசாயிகள் தற்போதுள்ள சூழலால் விநியோக சங்கிலியின் தொய்வால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும்.

உற்பத்தியாகும் அனைத்து விளைபொருட்களும் இங்கேயே நுகரப்படும் வாய்ப்பு அதிகமாக இல்லாத பொருட்களை பிற்காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சேமிப்புக் கிடங்குகள் குளிர்ப்பதனக் கூடங்கள் ஆகியன ஏற்படுத்தப்பட்டள்ளன. நறுமணத் தைலம் தயாரிப்பதற்கான பூக்கள் அனுப்பப்பட்டு பூக்கள் பயிரிடும் விவசாயிகள் நட்டமடைவது தவிர்க்கப்படுகிறது.

* விவசாயிகள் அடுத்த பருவம் வரை வேளாண் சார் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக தேவையான பொருளாதார உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

* அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான திட்டங்களையும், குறைந்தபட்ச ஆதரவு வருவாயும் அளிக்கப்படுகிறது.

* பல்வேறு உதவித் தளங்கள், ஆதரவு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனும் பட்டினியால் வாடா வண்ணமும், சாலைகளில் தவிக்கா வண்ணமும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புலம் பெயர்ந்தோர், வீடற்றோர், நடைபாதைகளில் வசிப்போர் ஆகியோருக்காக அம்மா உணவகங்கள், பொது தங்கும் விடுதிகள் மூலம் தகுந்த சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட்டள்ளது.

தமிழக அரசால் கீழ்க்கண்ட இனங்களுக்கான விரிவான நிதிசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* முன்னிலை மருத்துவப் பணிகள் ( நிதியளிப்பு மற்றும் கொள்முதல்).

* வயது முதிர்வில் ஒய்வுபெறும் மருத்துவர்கள் துணை மருத்துவப் பணியாளர்களின் பணிக்காலம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உடனடி நிவாரணத் தொகை, குடிமைப் பொருட்களை பொது விநியோகம் மூலம் வழங்குதல் போன்ற அவசர சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை இக்கதவடைப்புக் காலத்தில் மேற்கொள்ளுதல்.

* உலக சுகாதார அமைப்பின் வரையறைகளின்படி சேவைகள் வழங்க கிராம ஊராட்சி அமைப்புகள் வரையிலும் தேவையான நிதி வழங்க ஏற்பாடு செய்தல்.

* பயிர்க் கடன், வீட்டு வசதிக் கடன் மற்றும் கைத்தறி கடன் உள்ளிட்டவற்றுக்கான திரும்பச் செலுத்தும் காலம், வட்டியின்றி மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

* உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசியமான கருவிகள் பராமரிப்பு ஆகிய அடிப்படை விநியோகத் தொடர் சங்கிலியைப் பாதுகாப்பதற்கும், அவசர தேவைகளுக்கான கொள்முதல் செய்வதற்கும் தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.

* சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கவும் மற்றும் தொழில் நிறுவனங்களை பாதுகாப்பதற்கும் தற்போதுள்ள நிதி நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கும் தேவையான நிவாரண உதவிகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

* தமிழக மக்கள் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிட, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புகை பிடித்தல் மற்றும் மதுபானங்கள் உட்கொள்வது ஆகியன உடலின் நோய் எதிர்ப்பு தன்மையைக் குறைக்கும் என்பதால், இவற்றை தவிர்த்திடவும் தமிழக மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக அரசு கொரனோ பாதிப்பிலிருந்து காத்து, தமிழ்நாட்டு மக்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதி செய்யவும் மாநிலத்தின் பொருளாதார நலத்தையும் உறுதி செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது”

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x