Published : 01 Apr 2020 06:15 PM
Last Updated : 01 Apr 2020 06:15 PM

வேடசந்தூர் கிராமப்புறங்களில் மைக்கில் பேசி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ.,

வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் கரோனா வைரஸ் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.,வும் டாக்டருமான பரமசிவம் மைக் பிடித்து பேசி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.,வாக உள்ளவர் டாக்டர் பரமசிவம். வேடசந்தூர் தொகுதி முழுவதும் கிராமப்புறங்களால் ஆனது.

இதனால் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. இதையறிந்த எம்.எல்.ஏ.,வும் டாக்டருமான பரமசிவம், கிராமம் கிராமமாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது போல் கரோனா குறித்த விழிப்புணர்வை மைக்கில் பேசி ஏற்படுத்திவருகிறார்.

இவருடன் சுகாதாரப் பணியாளர்களும் சென்று விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிவருகின்றனர்.

மேலும் தீயணைத்துறை வாகன உதவியுடன் கிராமப்புறங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும் மேற்கொள்ளச் செய்கிறார்.

இதுகுறித்து டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ., இந்து தமிழ் செய்தியாளரிடம் கூறுகையில், வேடசந்தூர் தொகுதி முழுவதும் கிராமப்புறங்கள் நிறைந்தது.

இதனால் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் கிராமம் கிராமமாக சென்று மக்களை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றேன்.

நான் ஒரு டாக்டர் என்பதால் இந்த கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறித்து முழுமையாக அறிந்தவன் என்பதாலும் மக்கள் எனது பேச்சை கேட்கின்றனர்.

எம்.எல்.ஏ., என்பதுடன் ஒரு டாக்டராக என் தொகுதி மக்களின் நலனை காக்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன். வல்லரசு நாடுகளை திணறிவரும் நிலையில் நாம் தனித்திருப்பதன் மூலம் மட்டுமே கரோனாவை வெல்ல முடியும் என கிராமமக்களிடம் எடுத்துக்கூறி வருகிறேன்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது எந்த அளவு அலைந்து மக்களை சந்தித்தேனோ அதைவிட பலமடங்கு முயற்சி எடுத்து மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன்.

தேவைப்படும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்புத் துறையினரை ஈடுபடுத்தி வருகின்றேன். தொகுதி முழுவதும் தொடர் கண்காணிப்பில் உள்ளேன், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x