

டெல்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய மேலப்பாளையத்தைச் சேர்ந்த 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருக்கும் நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியிலிருந்து மேலப்பாளையம் தனிமைப்படுத்தப்பட்டு, போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலப்பாளையம் பகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் நெருக்கமான குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். இங்கிருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து மேலப்பாளையத்தை தனிமைப்படுத்த, குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-ன்படியும், தொற்றுநோய்கள் சட்டம் 1897 ஷரத்து 2-ன் படி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டார்.
அதன்படி பிறபகுதிகளில் இருந்து மேலப்பாளையத்துக்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். போலீஸாருடன் பாதுகாப்பு பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலப்பாளையம் பகுதி மக்கள் அனைவரும் அவர்களது வீடுகளுக்குள் தங்கியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுபோல் இப்பகுதியில் காய்ச்சல், சளி பிரச்சினை உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணியில் 70 செவிலியர்கள் மற்றும் 70 மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று விவரங்களை கேட்டறிந்து வருகிறார்கள்.
மேலப்பாளையத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி இந்த மண்டலத்திலுள்ள துப்புரவு பணியாளர்கள் இன்று காலையில் துப்புரவு பணிக்கு செல்லாமல் மண்டல அலுவலக வளாகத்தில் திரண்டிருந்தனர்.
இதையடுத்து அதிகாரிகளும், சிஐடியூ தொழிற்சங்கத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப்பின் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.