

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரத்தை இணைக்கும் சாலைகளுக்கு சீல் வைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் நகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் 6, 7, 8 ஆகிய வார்டுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விழுப்புரம் நகரை இணைக்கும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்படுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எஸ்.பி. ஜெயக்குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி சங்கர் தலைமையிலான போலீஸார் 6, 7, 8 ஆகிய வார்டுகளை இணைக்கும் சாலைகளுக்கு சீல் வைத்தனர். இப்பகுதியில் வெளியிலிருந்து உள்ளே செல்லவும், வார்டில் வசிப்பவர்கள் வெளியே வரவும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டு போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே விழுப்புரம் நகரை இணைக்கும் திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, புதுச்சேரி, பானாம்பட்டு, சாலாமேடு உள்ளிட்ட சாலைகளுக்கு சீல் வைக்க சவுக்குக் கட்டைகளால் சாலை தடை செய்யப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால், இன்று (ஏப்.1) வரை இச்சாலைகள் தடை செய்யப்படவில்லை. இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனே நகரை இணைக்கும் சாலைகளுக்கு சீல் வைத்து வெளி ஊர்களிலிருந்து விழுப்புரம் வருபவர்களைத் தடை செய்வதன் மூலம் கரோனா வைரஸ் கிராமப் புறங்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.