

கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம், தமிழகத்தில் சுமார் 2.5 லட்சம் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டுப்புறக் கலைஞர்கள் தொழில் இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில துணைத் தலைவரும், இந்திய மக்கள் நாடக மன்றத்தின் மாநில தலைவருமான கலைமாமணி பொ.கைலாசமூர்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், நாதஸ்வரம், மேளவாத்தியம், பாவைக்கூத்து, தெருக்கூத்து, கனியான்கூத்து, வில்லிசை போன்ற ஏராளமான நாட்டுப்புறக் கலைகள் உள்ளன.
இந்த கலைகளை சார்ந்த கலைஞர்கள் சுமார் 1.25 லட்சம் பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இதே போல் பதிவு செய்யாமல் சுமார் 1.25 லட்சம் கலைஞர்கள் தமிழகத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு நாட்டுப்புறக் கலைதான் வாழ்க்கை. வேறு தொழில் எதுவும் தெரியாது. நாட்டுப்புற கலைகளை நம்பியே இருக்கின்றனர்.
வழக்கமாக தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தான் கோயில் விழாக்கள், திருமண விழாக்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறும். இந்த காலத்தில் தான் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அதிக தொழில் வாய்ப்பு கிடைக்கும்.
பெரும்பாலான கலைஞர்கள் இந்த மூன்று மாதம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தான் ஆண்டு முழுவதும் குடும்பத்தை நடத்துவார்கள். வாங்கிய கடன்களை அடை்பார்கள்.
ஆனால், இந்த ஆண்டு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கோயில் விழாக்கள், திருமண விழாக்கள், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டுப்புறக் கலைஞர்கள் தொழில் இன்றி வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
எனவே, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த கலைஞர்கள் மட்டுமின்றி, அனைத்து கலைஞர்களுக்கும் நிவாரண உதவி கிடைக்க செய்ய வேண்டும் என்றார் அவர்.
தூத்துக்குடியில் சகா நாட்டுப்புறக் கலைக்குழுவை நடத்தி வரும் கல்லூரி பேராசிரியர் மா.சங்கர் கூறும்போது, இந்த மாதத்தில் பல்வேறு கோயில் விழாக்களில் நிகழ்ச்சி நடத்த எங்கள் குழுவுக்கு ஏற்கனவே வந்த பல ஆர்டர்கள் கரோனா எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் தான் புதிய கலைஞர்கள் பலர் உருவாவார்கள். கரோனா தாக்கம் காரணமாக அது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கோடைகால பயிற்சிகள் அளிப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பெரிய பாதிப்பை கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அரசு செய்ய வேண்டும் என்றார் அவர்.