

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தமிழகத்தில், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ள சந்தைகள் மூடப்பட்டு, விலாசமான பகுதிகளில் தற்காலிக சந்தைகள் இயங்கி வருகின்றன.
தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தையும், புதிய பேருந்து நிலையத்தில் மீன் மற்றும் இறைச்சி சந்தையும் தற்காலிகமாக இயங்கி வருகின்றன. தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி சந்தையை ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது, கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் ஆட்சியர் விநியோகம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, “பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் நுழைவுவாயிலில் சோப்பு போட்டு கைகளை கழுவிவிட்டு வர வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று இதுவரை யாருக்கும் உறுதி செய்யபடவில்லை. டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சிக்கு சென்று வந்த 8 பேர், தென்காசி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டு அவர்கள் குற்றாலத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி மக்களிடம் பேசி வருகிறோம். டெல்லி சென்று திரும்பியவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பப்படும்” என்றார்.
இந்நிலையில், டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 8 பேருக்கும், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. கரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரியை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.