

மதுரை மாநகராட்சியில் கரோனா நோய் தடுக்க தத்தனேரி பகுதியில் வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கிருமி நாசினி தெளிக்கும் எந்திரத்தை எடுத்து அவரும், அப்பகுதியில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
இந்த நேரத்தில் ‘கரோனா’ பரவிவிடுமோ என்ற அச்சத்தில் மனிதர்களைக் கண்டு மனிதர்களே அச்சப்படும் நேரத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செயல்பாட்டைப்ப்பார்த்து தூய்மைப்ப்பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில், ‘‘மாநகராட்சியின் 5 வாகனங்கள், தீயணைப்புத் துறையின் 3 வாகனங்கள் என 8 வாகனங்கள் மூலமும், கைதெளிப்பான்கள் மூலமும் இந்த கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
கிருமி நாசினிகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, தலைக்கவசம், சீரூடை என அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது, ’’ என்றார்.