

கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் 22 அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் ரூ.1000-க்கு டோர் டெலிவரி செய்யும் திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் சமூகப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படும் விதமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் படி இம்மாதம் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒரு மீட்டர் இடைவெளி கோடுகள் வரையப்பட்டு அந்த இடைவெளியில் நின்று பொதுமக்கள் பொருள்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆனாலும், கடைவீதிகள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் தொடர்ந்து அதிகமாகவே காணப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கடை வீதிகளுக்கு வரும் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படும் விதமாக வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட வேளாண் விளைபொருள்கள் அடங்கிய தொகுப்பை ரூ.ஆயிரத்துக்கு டோர் டெலிவரி செய்யும் திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பூச்சிக் கொல்லி உபயோகப்படுத்தப்படாத மானாவாரி சாகுபடி விவசாய விளைபொருட்களான 1.மஞ்சள், 2.சீரகம், 3.சோம்பு, 4.கடுகு, 5.வெந்தயம், 6.மிளகு, 7.துவரம்பருப்பு, 8.உருட்டு உளுந்து, 9.பாசிப்பருப்பு, 10.பாசிப்பயறு, 11.கருப்பு சுண்டல், 12.புளி, 13.பொரிகடலை, 14.சீனி, 15.போர் மொச்சை, 16.கோதுமை மாவு, 17.பெருங்காயத்தூள், 18.வத்தல், 19.ரவை, 20.சமையல் எண்ணைய், 21.உப்பு மற்றும் 22.சக்ரா கோல்டு டீத்தூள் பொட்டலம் ஆகிய 22 உணவுப் பொருட்கள் அடங்கிய மொத்தம் 10.425 கிலோ எடையுள்ள சிப்பம் ரூ.ஆயிரத்துக்கு டோர் டெலிவரி மூலம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் அரசின் ஊரடங்கு உத்தரவினை தவறாது தீவிரமாகக் கடைபிடித்து தங்களை தற்காத்துக் கொள்ள எங்கும் வெளியில் செல்லாமல் எளிதில் ரூ.ஆயிரத்துக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீட்டிலிருந்தபடியே 97509 43814, 97599 43816, 92454 12800 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அனைத்தும் விருதுநகர் அருகே மல்லாங்கிணரில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் இயங்கும் சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் தயார் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படும் வேளாண் பொருள்கள் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், விருதுநகரில் உள்ள பொதுமக்கள் மளிகைப் பொருள்கள் பட்டியலை பெயர், அலைபேசி எண்ணுடன் குறிப்பிட்ட கடையில் கொடுத்துவிட்டுச் சென்றால் போதுமானது என்றும், மாலைக்குள் குறிப்பிட்ட நபர்களுக்கு குறிப்பிட்ட மளிகைப் பொருள்கள் அனைத்தும் காவல் நண்பர்கள் மூலம் மாலைக்குள் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.