

புகைப்படக் கலைஞர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழக புகைப்படக் கலைஞர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார் கிருஷ்ணகிரியில் இன்று (ஏப்.1) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
"கரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பணிகள் பாராட்டுக்குரியவை. குறிப்பாக, தமிழக அரசு மேற்கொண்டுள்ள பணிகள் மிகச் சிறப்பாக உள்ளன என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் புகைப்படத் தொழிலை நம்பி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் முழு நேரம் புகைப்படத் தொழிலை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இப்போது திருமணக் காலம். இந்தக் காலங்களில் ஏராளமான திருமணங்கள், கூட்டங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதனால் எங்களது புகைப்படக் கலைஞர்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பாக இருந்துவந்தது.
கடந்த 20 நாட்களாக, கரோனா பாதிப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டோ ஸ்டுடியோ, கலர் லேப் மற்றும் போட்டோ உபகரணங்கள், ஆல்பம் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்தும் முழு அளவில் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்படைந்துள்ளனர்.
எங்களுடைய புகைப்படக் கலைஞர்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. இதனைக் களையும் பொருட்டு தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி எங்கள் புகைப்படக் கலைஞர்களுக்கு இடைக்கால நிவாரணமாக அனைவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 20 தினங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு நாங்கள் வைத்த கோரிக்கையான வங்கிகளில் மற்றும் தனியார் நிறுவனங்களில் வாங்கப்பட்டுள்ள கடன்களுக்கான இஎம்ஐ மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை ஏற்று ரிசர்வ் வங்கி மூன்று மாதங்களுக்கு கடனைக் கட்ட வேண்டாம் என அறிவித்துள்ளது. அதற்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தாலும்கூட இப்போதும்கூட வங்கிகளிலிருந்து பணம் கட்டுவதற்கான நினைவூட்டல் குறுஞ்செய்தி வந்து கொண்டிருக்கிறது.
இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் புகைப்படக் கலை என்பது அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக உள்ளது.
குறிப்பாக, வங்கிகளுக்கு ஏதேனும் தேவைகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் கூட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க வேண்டியுள்ளது. அதனால், இந்தப் புகைப்படத் துறையை அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக கருத்தில்கொண்டு அத்தியாவசியத் துறையில் இணைக்க வேண்டுமென இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்து வரும் பல்வேறு சிறப்பான பணிகளை தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருவது பாராட்டுக்குரியது. தாயுள்ளம் கொண்ட தமிழக அரசு எங்களுடைய கோரிக்கையை ஏற்று புகைப்படக் கலைஞர்களின் ஜீவாதாரம், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புகைப்படக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இடைக்கால நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மீண்டும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு சிவக்குமார் தெரிவித்தார்.