கரோனா தடுப்புப் பணிகள்: மேலும் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கிய கனிமொழி

நிதி ஒதுக்கியதற்கான கடிதத்தை ஆட்சியரிடம் வழங்கும் கனிமொழி.
நிதி ஒதுக்கியதற்கான கடிதத்தை ஆட்சியரிடம் வழங்கும் கனிமொழி.
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்கெனவே ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தார். இப்போது மேலும் 50 லட்ச ரூபாயை கரோனா தடுப்புப் பணிகளுக்காக கனிமொழி ஒதுக்கியுள்ளார்.

மார்ச் 27-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கனிமொழி எம்.பி. அனுப்பிய கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான தற்காப்புக் கருவிகள் வாங்குதல், கரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும், மேற்கண்ட பணிகளுக்கு நிதியை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று (ஏப்.1) கனிமொழி தனது தொகுதியான தூத்துக்குடியில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனையைப் பார்வையிட்டார். அப்போது தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனை டீன் திருவாசகமணி, கரோனா சிறப்பு அவசர சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வார்டின் உள்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி தேவைப்படுவதாக கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலும் 50 லட்ச ரூபாயை ஒதுக்கிய கனிமொழி, இதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கினார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in