

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது பல்வேறு தொழில்களையும் அடியோடு முடக்கிப் போட்டிருக்கும் நிலையில், கிராமியக் கலைஞர்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, தோல்பாவைக் கூத்து உள்ளிட்ட கிராமியக் கலைஞர்களுக்கு பங்குனி, சித்திரை மாதங்களில்தான் தொழில் வாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும். பங்குனி மாதத்தில் வயலில் நெல் அறுவடை முடிந்து, சித்திரையில் அடுத்த விதைப்புக்குத் தயாராகும் விவசாயிகள் சிறிது இளைப்பாறுவர். கிராமப்புற சிறு தெய்வக் கோயில்களில் பங்குனி, சித்திரை மாதங்களில் கொடை விழாக்கள் நடத்துவது தென் மாவட்டங்களில் வழக்கம். இதேபோல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பெருந்தெய்வக் கோயில்களிலும் பங்குனி மாதத்தில் பத்து நாள் திருவிழா வெகுவிமரி சையாக நடைபெறும்.
இந்தத் திருவிழாக்களின்போது கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்குத் தடை இருப்பதால் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் மேஜிக் ஷோ, புராதனத் தொன்மையை விளக்கும் வகையிலான தோல்பாவைக் கூத்து போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு கலை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கிராமியக் கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
இதுகுறித்து வில்லிசைக் கலைஞர் தங்கமணி 'இந்து தமிழ் திசை' இணையதள செய்திப்பிரிவிடம் கூறுகையில், ''குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்தான் வில்லிசைக் கலைஞர்கள் அதிகம். இங்கு மட்டும் 120 குழுக்களுக்கு மேல் இருக்கிறது. ஒரு குழுவுக்கு ஆறேழு பேர் இருப்பார்கள்.
வில்லிசைக் கலைஞர்களைப் பொறுத்தவரை இந்த பங்குனி, சித்திரை மாதங்கள்தான் உச்சகட்ட சீசன். ஆண்டு முழுவதும் வாழ்வை ஓட்டுவதற்கு இந்த நேரத்து சம்பாத்தியம்தான் கை கொடுக்கும். ஆனால் இந்த ஊரடங்கால், மாதம் முழுவதும் வேலை இருக்கும் பங்குனி மாதத்தை வீட்டிலேயே கடத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதேநிலை தோல்பாவை, பொம்மலாட்டம் உள்ளிட்ட அனைத்து கிராமியக் கலைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக நாங்கள் எங்களது வழ்வாதாரத்தை இழந்து நிற்பதால் அரசு கிராமியக் கலைஞர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கி நலிவுற்று இருக்கும் எங்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வில்லுப்பாட்டுக்கு பதில் எங்கள் பஞ்சப்பாட்டைத்தான் பாட வேண்டும்'' என்றார்.