

கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா வைரஸ் பாதிக்கப் பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,200 படுக்கை கள், அரசு மருத்துவமனை களில் 300 படுக்கைகள், தனியார் மருத்துவ மனைகளில் 900 படுக்கைகள் என மொத்தம் 2,400 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும் தஞ்சாவூர் ரயில்வே மருத்துவமனையில் 28 படுக்கை கள், மருத்துவக் கல்லூரி வளாக நர்சிங் கல்லூரியில் 150 படுக்கைகள், ராசா மிராசுதார் மருத்துவமனை வளாக கட்டிடத்தில் 200 படுக்கை கள், கரந்தை சமுதாயக் கூடத்தில் 50 படுக்கைகள், செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் 1,100 படுக்கைகள், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காத்திருப்பு கட்டிடத்தில் 20 படுக்கைகள் என 6 மாற்று இடங்களில் 1,548 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும் கும்பகோணத்தில் 3 பள்ளிக்கூடங்களில் 40 படுக்கை கள், கண் மருத்துவமனை வளாகத்தில் 40 படுக்கைகள், பட்டுக்கோட்டையில் 6 சமுதாயக் கூடங்களில் 120 படுக்கைகள், 7 மாற்று இடங்களில் 140 படுக்கைகள் என தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 4,388 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதேபோன்று, வல்லத்தில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர் களைத் தனிமைப்படுத்த அறைகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளத் தேவை யான அனைத்து நடவடிக்கைகளும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
39,361 பேருக்கு பரிசோதனை
தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 பொது இடங்கள், 8 சோதனைச் சாவடிகள், 26 அரசு அலுவலகங்கள் என மொத்தம் 59 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 39,361 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணியில் 108 ஆம்புலன்ஸ்கள் 22-ம், இருசக்கர ஆம்புலன்ஸ்கள் 2-ம், தனியார் ஆம்புலன்ஸ்கள் 78-ம் என மொத்தம் 102 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் அழிந்து, உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி தஞ்சை பெரிய கோயிலில் மிருத்தியுஞ்சய மகா யாகம் நேற்று முன்தினம் நடைபெற்றது.