Published : 01 Apr 2020 07:54 AM
Last Updated : 01 Apr 2020 07:54 AM

வாசகர்கள்தான் என் உறவினர்கள்! - சொந்தம் பாராட்டும் பாபநாசம் முகவர் சரோஜா அம்மா

ஊரடங்கு நேரத்திலும் உழைத்துக் கொண்டிருக் கும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டார முகவர் சரோஜா அம்மா வுக்கு 75 வயது. இந்த நேரத்தில் பத்திரிகை விநியோக அனுபவம் எப்படியிருக்கிறது என்று அவருடன் பேசலாம்.

“எங்க அப்பா நாராயணசாமி, 70 வருஷமா ‘தி இந்து’ ஏஜென்டா இருந்தாரு. அவருக்குப் பிறகு அம்மா அதைப் பார்த்துக் கிட்டாங்க. 1986-ல் இருந்து நான்தான் ஏஜென்ட். இப்ப ‘இந்து தமிழ் திசை’க்கும் நான்தான் முகவர்.

சின்ன ஊருங்கிறதால எல்லா வாசகர்களும் எனக்கு நல்ல அறிமுகம். எங்ககிட்ட 2 பையன்க வேலை பார்க்கிறாங்க. ஒருத்தர் லைனை பார்த்துக்கிறார். இன்னொருத்தர் கடை யாவாரம். எனக்கு குழந்தைங்க கிடையாது, ஆனா, ‘அந்த ரெண்டு பேரும் உங்க சொந்தப்பிள்ளையா?’ன்னு மத்தவங்க கேட்கிற அளவுக்கு, அவ்வளவு நல்ல புரிதல் எங்களுக்குள்ள இருக்குது.

கரோனா பாதிப்பால ஒருத்த ருக்கு கூட பேப்பர் போகாம இருக்கக்கூடாதுன்னு நான் சொல்றதுக்கு முன்னாடியே, ‘மற்ற நாள்ல கூட லேட்டாகலாம். இப்ப சரியா 6 மணிக்கு பேப்பர் வரலைன்னா வாசகர்கள் போன் போட ஆரம்பிச்சிடுறாங்க’ன்னு அவங்க ரெண்டு பேரும் என்கிட்ட சொன்னாங்க.

எங்க ஊருக்கு ராத்திரி 2 மணிக்கே ‘இந்து தமிழ் திசை’ கட்டு வந்திடும். 4 மணிக்கே பேப்பரைப் பிரிச்சி வீடுவீடா போட ஆரம்பிச்சிடுவோம்.

‘60 வயசுக்கு மேல கரோனா வால ரொம்ப ரிஸ்க்காம், பார்த்து இருங்க அம்மா’ன்னு வாசகர்கள் நிறைய பேர் போன் போட்டு உரிமையா எச்சரிப்பாங்க. இந்த அன்புதான் அவங்களையும் என்னையும் இணைக்குது.

முன்னாடி எல்லாம் சில பேரு, ‘உங்களுக்கு என்ன ஒண்ணும் இல்லாமலா இருக்கு. ஏன் இந்த வயசுல இப்படிச் சிரமப் படுறீங்க? ’ என்பார்கள். எனக்கு ஊரோடு இருக்கிற ஒரே தொடர்பு பத்திரிகைதான். இந்த வயசிலும் நான் பிஸியாக, வேறு கவலைகள் இல்லாமல் இருக்கிறேன்னா அதுக்குக்காரணம் பத்திரிகைகள் தான். வெறும் விநியோகம் மட்டும் கிடையாது. எல்லாப் பத்திரிகைக ளையும் முடிஞ்சவரைக்கும் வாசிச்சிடுவேன். 2 நாளுக்கு முன்னாடிகூட ஒரு பொண்ணு போன் போட்டு, ‘பிள்ளைங்க வீட்ல சும்மா உட்கார்ந்திருக்காங்கம்மா. அவங்களை என்ன பேப்பர், புத்தகம் வாசிக்கச் சொல்லலாம்? ’ன்னு கேட்டது.

நான் சில அறிவுரைகளைச் சொன்னேன். நேத்து போன் பண்ணி தேங்ஸ் சொன்னா. மாசத்துல நாலு பேராவது, ‘அம்மா உங்கள பார்த்து நாளாச்சே எப்ப வர்றீங்க? ’ என்று கேட்பார்கள். கரோனாவால, அவங்க வீட்டுக்குப் போக முடியல. அது ஒண்ணுதான் கவலை. 75 வருஷ வாழ்க்கையில எவ்வளவோ பார்த்தாச்சு. இதுவும் கடந்து போகும்” என்றார் சரோஜா அம்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x