

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், அது மாவட்ட நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்டதாகவும் கடந்த மார்ச் 29-ம் தேதி வாட்ஸ் அப்-ல் வதந்தி பரவியது. இதனால், திருத்தணி பகுதியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
இதுகுறித்து, திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தனின் அறிவுறுத்தலின்பேரில், கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியவர்கள் குறித்து திருத்தணி போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் திருத்தணி, சித்தூர்ரோடு, காசிநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மனோஜ்குமார், வெங்கடேசன், பவானி, அப்துல் ரகுமான், சாமிநாதன் ஆகியோர் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக வாட்ஸ்- அப்-ல் வதந்தி பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவுசெய்த போலீஸார், அப்துல் ரகுமான்(30), சாமிநாதன்(33) ஆகிய இருவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மனோஜ்குமார், வெங்கடேசன், பவானி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.