மார்ச் 15 நுங்கம்பாக்கம் விசா விண்ணப்ப மையத்துக்கு வந்தவருக்கு கரோனா: உடன் இருந்தவர்கள் தகவல் தர வேண்டுகோள்

மார்ச் 15 நுங்கம்பாக்கம் விசா விண்ணப்ப மையத்துக்கு வந்தவருக்கு கரோனா: உடன் இருந்தவர்கள் தகவல் தர வேண்டுகோள்
Updated on
1 min read

மார்ச் 15-ம் தேதி மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு விசா விண்ணப்ப மையத்துக்கு வந்த நபருக்கு கரோனா உறுதியாகியுள்ளதால் அங்கு அந்த தேதியில் வந்தவர்கள் தங்களைப்பற்றிய தகவலைத் தர சென்னை மாநகராட்சி ஆணியர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது இன்று ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 124 ஆக உயர்ந்தது. டெல்லி விழாவில் கலந்துக்கொண்டு தமிழகம் திரும்பியவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கரோனா தொற்றை தடுக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கரோனா தொற்று ஏற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவது, அவர்கள் வசிக்கும் பகுதியில் சுற்றளவில் உள்ள 2500க்கும் மேற்பட்ட வீடுகளை பரிசோதிப்பது, நோயுற்றவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி அவர்கள் சென்ற இடங்கள் பழகிய நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியும் நடக்கிறது.

இந்நிலையில் சென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை விசாரித்தபோது கடந்த 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள குட் ஷெப்பர்டு பில்டிங் முதல் மாடியில் உள்ள அமெரிக்க விசா விண்ணப்ப மையம் அலுவலகத்தில் வந்து இருந்துள்ளார்.

மதியத்துக்கு மேல் அவர் வந்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல் அந்த விசா சென்டருக்கு சென்ற நபர்கள் தயவு செய்து தங்களை உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள், உங்களைப்பற்றிய தகவல்களை எங்களுக்கு அளியுங்கள், மிக அவசரம்’’ என தெரிவித்துள்ளார்.

அந்த தேதியில் அங்கு யார் சென்றிருந்தாலும் அவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் அவர்களை சார்ந்தவர்கள், அக்கம்பக்கத்தினரையும் காக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in