

ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் அவர்களால் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் அளிக்கப்படும் உயிர்வாழ் சான்றினை ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் அலுவலர்களிடம் ஒவ்வொரு வருடமும் ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முழுவதும் சென்னையிலுள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் மாவட்டங்களில் 31 மாவட்ட கருவூலங்கள், 238 சார் கருவூலங்கள் வாயிலாக 7.30 லட்சம் ஓய்வூதியர்கள் தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பெறுகின்றனர்.
ஓய்வு பெற்ற பணியாளர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியர்கள் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற விவரங்கள் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய / நிறுத்த இயலும். எனவே, நேர்காணல், அதாவது ஓய்வூதியர் உயிருடன் உள்ளாரா என்பதை அறிய வருடந்தோறும் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான மாதங்களில் ஆண்டுதோறும் தற்போது நிகழ்த்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான கோடை காலம் என்பதாலும் தற்போது கொரானா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதாலும் ஓய்வூதிய சங்கங்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை எண் 215 நிதி (ஓய்வூதியம்) துறை, ஆணைப்படி மாநில அரசு ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள்அவர்களால் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் அளிக்கப்படும் உயிர்வாழ் சான்றினை ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் அலுவலர்களிடம் ஒவ்வொரு வருடமும் ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட நடைமுறை 2020-ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
மேற்குறிப்பிட்ட நேர்காணல் முறையில் அரசினால் மாற்றி அமைக்கப்பட்ட ஆணைகளை கவனத்தில் கொண்டு அனைத்து அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்றினை ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் அலுவலர்களிடம் அளிக்கவோ அல்லது நேரடியாக ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் அலுவலர்களான ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் / கருவூல அலுவலர்/ உதவி கருவூல அலுவலர் முன்னிலையில் ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏதாவதொரு பணி நாளில் 2020-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நேர்காணலுக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.