

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய 523 நபர்களில் 50 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள நிஜாமுதீன் மர்கஸில் இஸ்லாமியர்கள் நடத்திய தப்லிக் ஜமாத் எனும் மத வழிபாடு மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்தும் 1500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழகம் திரும்பிய அவர்களில் பலருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலர் ஒன்றுகூடும் நிகழ்ச்சியில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் அவர்களுக்குப் பரவியுள்ளது. இந்நிலையில் அந்நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
சென்னையில் சுகாதாரத்துறைச் செயலர் அளித்த பேட்டி:
''இதுவரை மொத்தம் 77,330 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் ஏர்போர்ட், ரயில் மூலம் வந்தவர்கள், சாலை மார்க்கமாக வந்தவர்கள் என அனைவரும் அடங்குவர். தற்போது மத்திய அரசு மேலும் இரண்டு ஆய்வகங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் அரசின் 11 ஆய்வகம் தனியார்களின் 6 ஆய்வகங்கள் என 17 ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இயங்குகிறது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் 1,500 பேர் தமிழகத்திலிருந்து கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டவர்களில் 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். இதில் நாங்கள் 523 பேரைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியுள்ளோம். அந்தக் குழுவில் வந்தவர்கள், ஒரே குழுவாக வந்தவர்கள் தயவுசெய்து வெளியே வாருங்கள்.
நீங்கள் வராவிட்டால், அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்ப உறுப்பினர், இந்த சமூகத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கும். அது மாநிலம் முழுவதையும் பாதிக்கும். கண்டறியப்பட்ட 523 பேர் தவிர மற்றவர்களைக் கண்டறியும் பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் அந்தக் குழுவில் இருந்த 50 பேருக்கு தற்போது கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காலையில் 7 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. ஆக மொத்தம் 57 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
மாநாடு சென்றவர்களில் கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் 5 கி.மீ.மேலும் 2 லிருந்து 3 கி.மீ. என கடுமையான சோதனைகள் நடத்தப்படுகின்றன. தனிமைப்படுத்துதலைக் கடுமையாக கண்காணிக்கிறோம்.
அவர்களில் மீதமுள்ள 550 பேர் தொடர்பையும் கண்காணிக்க உள்ளோம். அவர்களின் செல்போன் எண்ணை எடுத்துவிட்டோம். சில பேர் விமானத்திலும், சில பேர் ரயிலிலும், சில பேர் மற்ற மாநிலங்களுக்கும் சென்றுவிட்டு தமிழகம் வந்துள்ளனர். அனைத்துத் தகவல்களையும் திரட்டியுள்ளோம். போலீஸ் துணையுடன் அவர்களைக் கண்காணித்துப் பிடிக்க உள்ளோம்.
யார் யார் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தாலும் எங்களுக்குத் தயவுசெய்து சொல்லிவிடுங்கள். தமிழகத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும் அனைவரும் நல்ல உடல் நிலையில்தான் உள்ளனர். யாரும் ஆபத்தான நிலையில் இல்லை”.
இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
அப்போது, ''பிப்ரவரி மாதம் இதேபோன்று ஈஷா யோகா நவராத்திரி விழா நடத்தியது அதில் வெளிநாடுகளிலிருந்து பலர் கலந்துகொண்டு சென்றுள்ளனரே'' என்று பீலா ராஜேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ''நாங்கள் பிப்ரவரி 15-க்குப் பிறகு நடந்த அனைத்தையும் கண்காணிக்கிறோம். அந்த நிகழ்ச்சி குறித்தும், அதேபோன்று வேறு நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலும் அது குறித்தும் தகவல்கள் திரட்டப்படுகின்றன. பொதுமக்கள் கும்பலாகக் கூடிய அனைத்து நிகழ்வுகளும் கண்காணிக்கப்பட்டு தகவலைச் சேகரித்து வருகிறோம்'' என்று பீலா ராஜேஷ் தெரிவித்தார்.