

வெளிநாடுகளில் இருந்து குமரி மாவட்டத்திற்கு சமீபத்தில் 4446 பேர் வந்துள்ளதால் கரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது. எனவே கண்காணிப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை மேற்கொண்ட தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் வலியுறுத்தினர்.
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேயுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது; கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் கரோனா வைரஸ் பரிசோதனை மையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து 4446 பேர் வந்துள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் பொது இடங்களில் சுற்றி வருகின்றனர்.
இதனால் கரோனா சமூக பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்களுக்கு இவர்கள் மூலம் கரோனா வைரஸ பரவி விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
எனவே வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளோரை பெயரளவிற்கு தனிமைப்படுத்தாமல், தனித்தனியை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
கரோனாவால் மக்கள் பேரிழப்பை சந்தித்துள்ள நிலையில் மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணங்களை தள்ளுபடி செய்யவேண்டும். நகர புறங்களில் உள்ள நோய்தடுப்பு நடவடிக்கை கிராமப்புறங்களில் இல்லை. குமரியில் கிராமப்புறங்களில் பரவலாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும். காய்கறி, மளிகை கடையில தற்போது விலை அதிகமாக உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை உயர்வை கட்டுப்படுத்தி கடைகளின் முன்பு விலைப் பட்டியல் வைக்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் அரசு வழங்கும் ரூ.1000 கரோனா நிவாரண பணத்தை பெறுவதற்காக அதிகமானோர் கூட வாய்ப்புள்ளதால் நோய்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் இந்த பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.