ஊரடங்கால் உருக்குலைந்துபோன தேயிலை விவசாயம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

ஊரடங்கு உத்தரவால் உருக்குலைந்து போயுள்ளது தேயிலை விவசாயம். எனவே, நீலகிரியில் உள்ள தேயிலை விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் தேயிலைத் தூள் விநியோகிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் சிறு, குறு தேயிலை சாகுபடியாளர்கள், கரோனா தொற்றுநோய் பரவாமல் இருக்கும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவை ஏற்றும் கடந்த ஒரு வாரமாக பசுந்தேயிலையைப் பறிக்காமல் உள்ளனர். இதனால், பசுந்தேயிலை சாகுபடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான சாகுபடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக, பசுந்தேயிலையை 10 நாட்களுக்கு ஒருமுறை பறிக்க வேண்டும். இல்லையேல் அந்தத் தேயிலையை மீண்டும் பறிக்க முடியாது. அப்படியே பறித்தாலும், அது தரமானதாக இருக்காது. பசுந்தேயிலையைப் பறிக்காமல் விட்டுவிட்டால், அப்படியே மரமாக வளர்ந்துவிடும். மீண்டும் அதைச் செடியாக மாற்ற குறைந்தபட்சம் 6 மாதங்களாகும்.

பசுந்தேயிலையை நாற்றாக நடவு செய்து, சாகுபடி செய்ய குறைந்தது 2 முதல் 3 வருடங்களாகும். கரோனா பாதிப்பு இல்லாத காலத்திலேயே ஆண்டுதோறும் பனிக்காலமான டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சாகுபடி இருக்காது. பனிக் காலம் முடிந்து மார்ச், ஏப்ரல் மாதத்தில்தான் மீண்டும் சாகுபடி தொடங்கும்.

தற்போதைய நிலையில், தேயிலைத் தோட்டங்களில் சகஜ நிலை திரும்ப ஓராண்டாகும். எனவே, நீலகிரி சிறு, குறு பசுந்தேயிலை சாகுபடியாளர்கள் மீண்டும் சகஜநிலைக்குத் திரும்பி, பசுந்தேயிலையைப் பறிக்கும் வரை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார உதவித்தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேயிலை சாகுபடியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மஞ்சை வி.மோகன் கூறும்போது, "அரசு மற்றும் தனியார் தேயிலைத் தொழிற்சாலைகளிடம் பசுந்தேயிலை சாகுபடியாளர்களின் முழு விவரமும் உள்ளதால், அனைத்து பசுந்தேயிலை சாகுபடியாளர்களுக்கும் குறைந்தபட்ச உதவித்தொகையாக தலா ரூ.5,000 வழங்க வேண்டும்" என்றார்.

ரேஷன் கடைகள் மூலம் தேயிலைத் தூள் விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெலிகொலு சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டு சங்க நிறுவனத் தலைவர் பி.எஸ்.ராமன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, "தேநீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் வழங்குவதுபோல டீத்தூளும் வழங்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் டீத்தூளை விநியோகித்தால் மாவட்டத்தில் உள்ள பசுந்தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 1.70 கோடி கிலோ உற்பத்தி செய்யப்படுகிறது.

மாநிலத்தில் உள்ள சுமார் 1.70 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ அல்லது 500 கிராம் டீத்தூளை வழங்கலாம். இதற்கு அரசுக்கு ரூ.100 கோடி செலவாகும். இதனால், டீத்தூள் தேவை அதிகரித்து, பசுந்தேயிலைக்கு நல்ல விலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in