

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நகராட்சி தினசரி சந்தையை நேற்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கு காய்கறி வாங்கும் மக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அத்தைகொண்டானில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்த கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று பேசினார்.
இதில், நியாய விலைகடைகளில் நாளை முதல் விநியோக்கப்பட்ட உள்ள விலையில்லா பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆயிரம் மக்களுக்கு சிரமம் இல்லாமல் வழங்க வேண்டும் என அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும், தமிழக அரசு எடுத்துள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கினார்.
கூட்டத்தின்போது, அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தமிழக முதல்வரின் கரோனா தடுப்பு நிவாரண நிதியாக கே.ஆர். நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் ரூ.10 லட்சத்துக்கான காசோலை,
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ரூ.1 லட்சம், செண்பகவல்லி அம்பாள் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பி.எம்.வி.நாகஜோதி ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினர்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் அனிதா, சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா, நகராட்சி ஆணையர் ராஜாராம், நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் ராஜூ, அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.