மதுரையில் மேலும் 2 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு
மதுரையில் மேலும் 2 பேருக்கு ‘கரோனா’ வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் அண்ணாநகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவர் ‘கரோனா’ வைரஸ் நோய்க்கு உயிரிழந்தார். தமிழகத்தில் முதல் கரோனா உயிரிழப்பு மதுரையில் நிகழ்ந்தது.
இதனையடுத்து அவரது குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் தொடர்பில் இருந்து மேலும் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு ‘கரோனா’ தொற்று இருப்பது மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிசோதனை ஆய்வு மையத்தில் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஒருவர் கரிமேடும், மற்றொரு தபால் தந்திநகரைச் சேர்ந்தவர் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ‘கரோனா’ பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த நோய் பாதிக்கப்பட்டு 5 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகின்றனர்.
