

புதுடெல்லி மாநாட்டில் பங்கேற்று சிவகங்கை திரும்பிய 26 பேர் வசித்த பகுதிகளை அதிகாரிகள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
புதுடெல்லியில் ஒரு அமைப்பின் சார்பில் மாநாடு நடந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 1,500 பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. திரும்பி வந்த சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு, அரியலூர், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 900-க்கும் மேற்பட்டோர் புதுடெல்லி மாநாட்டிற்கு சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களைக் கண்டுபிடித்து சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் புதுடெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 26 பேரை மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர்.
அவர்களில் 14 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், 11 பேர் காரைக்குடி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
மேலும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ள சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து புதுடெல்லி சென்று வந்தவர்கள் வசித்த பகுதிகளில் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், மருத்துவர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் கிருமினி நாசினி தெளிக்கும் பணிகளில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி, நகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் சிவகங்கை நகராட்சி பகுதிகளில் இன்று ஆய்வு செய்தனர்.