

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் ஒருவருக்கு கூட கரோனா வைரஸ் பாதிப்பு வர வாய்ப்பில்லை என கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்த 2100 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்துப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்த 4,730 தொழிலாளர்கள் தூத்துக்குடியில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களைக் கண்டறிந்து, பாதுகாப்பாக தங்கவைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் 30 பேர் கரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், 29 பேருக்கு எந்தவித பிரச்சினையுமில்லை என ஆய்வறிக்கை வந்துள்ளது. ஒருவருக்கு மட்டும் அறிக்கை வரவேண்டும்.
ஏப்.2-ம் தேதி முதல் நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரம் ரொக்கப்பணம், ஏப்ரல் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் விலையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் நியாயவிலை கடைகளுக்கு வருவதை தவிர்க்க, அவர்களின் வீடுகளுக்கே கொண்டு ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிஹார், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தங்கி பணிபுரிந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ஐஏஎஸ் அதிகாரியை தமிழக முதல்வர் நியமித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மூலமாகவும் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 150 படுக்கைகள் தனிமைப்படுத்தப்பட்டதாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 518 படுக்கைகள் தயாராக உள்ளன.
அறிகுறியுடன் யார் வந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களும் தயாராக உள்ளனர்.
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி எனது சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியில் ரூ.25 லட்சம் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ வசதிகளுக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளேன். இதே போல், சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பனும் ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார்.
ஊரடங்கு உத்தரவின்போது மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில், பணம் செலுத்தவில்லை என்பதால் கேபிள் டிவி இணைப்பை துண்டித்த பணியாளர்களை தான் காவல்துறை தடுத்துள்ளது. கேபிள் டிவியில் பணிபுரியும் தொழிலாளர்களை காவல்துறை தடுக்கவில்லை.
கோவில்பட்டியில் தினசரி காய்கறி சந்தை 2 அல்லது 3 இடங்களாக பிரிக்கப்படும். மேலும், 12 வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி
விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஒரே இடத்தில் கூடுவது தவிர்க்கப்படும்.
ஒத்துழையாமை இயக்க நடத்தி சுதந்திரம் பெற்றதை போல், தற்போது மக்கள் ஒத்துழைப்பு வழங்கி கரோனா வைரஸை விரட்ட வேண்டும், என்றார் அவர்.