

கரோனா தொற்று அச்சத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள சேலத்தில் வீடுகளில் கோதுமை, மஞ்சள் கலந்த அகல் விளக்கை ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று அச்சத்தில் பொதுமக்கள் கடந்த ஒரு வாரமாக வீடுகளில் முடங்கியுள்ளனர். கரோனா நோய்க் கிருமி தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், பொதுமக்கள் நோய்க் கிருமிகள் விலகிச் செல்ல வேண்டி வீடுகளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், தீமை கிரஹதோஷம் விலகிட வேண்டி, கோதுமை மாவுடன் மஞ்சள் தூளைக் கலந்து அகல் விளக்கை சாமி படத்தின் முன்பு ஏற்றி பொதுமக்கள் இன்று (மார்ச் 31) காலை 10 மணி முதல் 11 மணி வரை வழிபாடு செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் கோதுமை, மஞ்சள் அகல் விளக்கை ஏற்றி, நோய்க் கிருமிகள் பாதிப்பில் இருந்து பொதுமக்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில், வீடுகளில் கோதுமை, மஞ்சள் அகல் விளக்கு ஏற்றி பொதுமக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அகில இந்திய சைவ சிவாச்சாரியர்கள் சேவா சங்கத்தின் துணைத் தலைவர் சிவசங்கர் சர்மா கூறும்போது, ''வரும் சித்திரை மாதம் சூரிய பகவான் மேஷ ராசிக்கு இடம் பெயர்வதன் மூலம், சூரிய பகவானும், புதனும் வலுபெறுகின்றனர். சூரியனுக்கு உகந்த கோதுமை மாவும், குரு, புதனுக்கு உகந்த மஞ்சளும் கலந்த மாவில் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் நோய்க் கிருமிகள் என்ற இருள் நீங்கி, ஆரோக்கிய ஒளி வீசி, மக்கள் நலம் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா நோய்த் தொற்று கிருமி, வரும் கிரஹ மாற்றத்தின் காரணமாக இருக்க இடமில்லாமல் அழிந்து போகும். எனவே, பொதுமக்கள் சூரியனுக்கு உகந்த கோதுமை மாவு அகல் விளக்கை வீடுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்றி, வழிபாடு நடத்தியுள்ளனர்" என்றார்.