

தமிழகத்தில் ஆர்பிஐ வங்கி வழிகாட்டுதல் அடிப்படையில் வங்கிகள் கொடுத்துள்ள கடன்களுக்கான இஎம்ஐ , வட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என தமிழக நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த 21 நாட்களும் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை முடங்கும் சூழல் ஏற்படும். அதனால் பொருளாதாரச் சுணக்கம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டது.
இதையடுத்து 1.70 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிதித் தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்த தாஸ், தொழில்துறையினருக்கும், மக்களுக்கும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பாதிப்பால் நிதிக்குழுக் கூட்டத்தை முன்கூட்டியே ரிசர்வ் வங்கி கூட்டியது. இந்த வட்டிக் குறைப்பு மூலம் வீடு, வாகனக் கடன் வாங்கியவர்கள் மாதந்தோறும் செலுத்தும் தவணை, வட்டி உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்பை ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டார்.
பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால், அந்த கடனுக்கான மாத்த தவணையைச் செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும் என சக்தி காந்ததாஸ் அறிவித்திருந்தார்.
ஆனாலும் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வர நாளாகும், பல வங்கிகள் இது அறிவிப்பு மட்டுமே என்பதால் கடைப்பிடிக்காது என்ற சந்தேகம் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்தது. சில வங்கிகள் வாடிக்கையாளர் கணக்கில் பணம் இருந்தால் எடுத்துக்கொள்வோம் என அறிவித்ததால் மேலும் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறைச் செயலரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த நிதித்துறைச் செயலர், 3 மாத இஎம்ஐ, வட்டி வசூலிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்பிஐ வழிகாட்டுதலின் அடிப்படையில் அடுத்த 3 மாதங்களுக்கு அந்தந்த வங்கிகளின் சார்பில் கொடுக்கப்பட்ட கடன்களுக்கான இஎம்ஐ, வட்டி வசூலிக்கப்படாது. இதை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்தந்த வங்கிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அவர்கள் சார்ந்த வங்கிகளின் இணையதளத்தில் இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என தமிழக நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.