

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்களிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்த கோவில்பட்டி பகுதியில் நடமாடும் காய்கறி விநியோகம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
கோவில்பட்டியின் மையப்பகுதியில் நகராட்சியின் தினசரி சந்தை உள்ளது. இடநெருக்கடி உள்ள இடத்தில் ஒரே நேரத்தில் அங்கு மக்கள் கூடுவதால் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவானது.
இதையடுத்து கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்க முடிவெடுக்கப்பட்டு, நேற்று முன்தினம் முதல் அங்கு செயல்பட்டு வருகிறது. அங்கும் ஒரே குடையின் கீழ் மக்கள் திரண்டு வருவதால் மக்களிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்தும் விதமாக காய்கறிகளை மக்களுக்கு நேரடியாக கொண்டு விநியோக்க மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலைத்துறை மூலமாக ஏற்பாடு செய்துள்ளது.
இதில் சுமை ஆட்டோ அல்லது வேன்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த காய்கறிகளை ஒவ்வொரு வார்டாக சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை இன்று கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலிக தினசரி சந்தையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரஸ்வதி, உதவி இயக்குநர் சுந்தரராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைபடுத்துவதை எளிமையாக்கவும், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை ஏற்படுத்தவும் தோட்டக்கலைத்துறை மூலம் மக்களுக்கு நேரடியாக சென்று காய்கறி விற்பனை செய்வது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பேசி வருகிறோம். விவசாயிகளும் ஆர்வமுடன் இதற்கு விண்ணப்பிக்கின்றனர்.
சொந்தமாக வாகனங்கள் வைத்துள்ள விவசாயிகள் அதனை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்கள் இல்லாத விவசாயிகளை 3 அல்லது 4 பேர் கொண்ட குழுவாக சேர்த்து வாகனத்தில் கொண்டு காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.
இது அவர்களுக்கு வாகன வாடகையை குறைக்க ஏதுவாக இருக்கும். காய்கறி விற்பனை செய்யும் இடத்திலும் மக்களிடையே இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தி உள்ளோம்.
கோவில்பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. மேலும் கோவில்பட்டியை சுற்றி 60 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஓரிரு நாட்களில் காய்கறிகளை நேரடியாக கொண்டு விற்பனை செய்ய தயாராகி வருகிறோம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.