

தமிழகம் முழுவதும் 10 லட்சம் கோயில் குருக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில், அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என அகில இந்திய சைவ சிவாச்சாரியர்கள் சேவா சங்கத் துணைத் தலைவர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய சைவ சிவாச்சாரியர்கள் சேவா சங்கத் துணைத் தலைவர் சிவாச்சாரியார் சிவசங்கர் சர்மா தெரிவித்ததாவது:
"உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரம் கோயில்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட கோயில் குருக்கள் உள்ளனர்.
கரோனா தொற்று பராவமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 24-ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், அனைத்துக் கோயில்களும் இழுத்து மூடப்பட்டன.
தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. கோயில்களை நம்பி வாழும் குருக்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து அரசு கவனம் கொள்ளவில்லை.
கோயில்களில் உள்ள சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்கள் உள்ளிட்ட குருக்களுக்கு, மாதச் சம்பளம் இல்லாத நிலையில், தீபாராதானை தட்டில் பொதுமக்கள் அளிக்கும் காணிக்கையை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது, கோயில்களில் ஆகம விதிப்படி நடைபெற வேண்டிய இரண்டு கால, மூன்று கால, நான்கு கால பூஜைகள் வழக்கமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், பக்தர்கள் வழிபாடு இல்லாத நிலையில், கோயில் குருக்களுக்கு வருவாய் பாதித்துள்ளது. கோயில் குருக்களும், அவர்களின் குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சில தினங்களுக்கு முன்பு கூறும் போது, 'கோயிலை நம்பி வாழ்ந்து வரும் சிவாச்சாரியர், பட்டாச்சாரியர் உள்ளிட்ட குருக்களுக்கு அரசு மாத உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், கோயில்களில் பக்தர்களின் காணிக்கையை நம்பி வாழ்ந்து வரும் குருக்களுக்கு, வருமானம் ஏதுமின்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். எனவே, தமிழகத்தில் அரசு கோயில், கிராம கோயில்களை நம்பி வாழ்ந்து வரும் குருக்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு சிவாச்சாரியார் சிவசங்கர் சர்மா தெரிவித்துள்ளார்.