ஊரடங்கால் பசியில் தவித்த நரிக்குறவர்கள்: கோயில் அன்னதான திட்டத்தில் உணவு சமைத்து வழங்கிய அதிகாரிகள்

ஊரடங்கால் பசியில் தவித்த நரிக்குறவர்கள்: கோயில் அன்னதான திட்டத்தில் உணவு சமைத்து வழங்கிய அதிகாரிகள்
Updated on
1 min read

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த நரிக்குறவர்கள் குடும்பங்களுக்கு தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் அன்னதான திட்டம் மூலம் உணவு சமைத்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி காசி விஸ்வநாரர் கோயிலில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்னர், கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிட வரும் மக்கள் வெகுவாகக் குறைந்தனர்.

தூய்மைப் பணியாளர்கள், ஆதரவற்றோர் வெகுசிலரே அன்னதானம் சாப்பிட வந்நதால், உணவு தயாரிக்கும் அளவு குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாய மக்கள் உணவுக்கு வழியின்றி தவித்தனர்.

இதையடுத்து, தென்காசி வட்டாட்சியர் சண்முகம் ஆலோசனையின்படி, காசி விஸ்வநாதர் கோயில் அன்னதான திட்டம் மூலம் நரிக்குறவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று, 110 உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு வருவாய்த்துறையினர் முன்னிலையில் விநியோகிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு முடியும் வரை காசி விஸ்வநாதர் கோயில் அன்னதான திட்டம் மூலம் நரிக்குறவர்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in