

நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள், நடைபாதைவாசிகள் என்று பலரும் உணவுக்கு அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், உணவுக்கு மனிதர்களைச் சார்ந்திருக்கும் விலங்குகளும் பறவைகளும் என்ன செய்யும்? நாய்கள் முதல் காக்கைகள் வரை பல்வேறு உயிரினங்கள், பசியும் பட்டினியுமாகப் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், மனிதாபிமானம் கொண்ட பலரும் உயிரினங்களின் உயிரைக் காக்க, தங்களால் இயன்ற வகையில் அவற்றுக்கு உணவளித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சூரக்காடு எனுமிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த ஊர், சிதம்பரம் -நாகப்பட்டினம் வழித்தடத்தில் உள்ளதால் நவக்கிரக கோயில்களுக்கு இவ்வழியாகப் பல நூறு வாகனங்கள் சென்றுவரும். அதில் பயணிக்கும் பயணிகள் இங்கு நிறுத்தி குரங்குகளுக்கு உணவு வழங்குவது வழக்கம்.
தற்போது ஒரு வாரமாக ஊரடங்கு நிலவுவதால் இவ்வழியே வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. இதனால், உணவளிக்க யாருமின்றி இந்தக் குரங்குகள் வாடின. இதனையறிந்த மங்கைமடம் இளைஞர் கூட்டமைப்பினர், இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மங்கை வெங்கடேஷ் தலைமையில் செயலாற்றத் தொடங்கினர்.
குரங்குகளுக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம், கொய்யா உள்ளிட்ட பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்து வந்து உணவு அளித்து வருகின்றனர். வாடிக் கிடந்த குரங்குகள் அவற்றைப் புசித்துப் பசியாறி வருகின்றன.
எத்தனை நாள் ஊரடங்கு அமல் இருக்கிறதோ அத்தனை நாளும் குரங்குகளுக்கு உணவளிக்கப் போவதாக, மங்கை வெங்கடேஷ் கூறியுள்ளார். இப்பணியில் ராஜா, இளவழகன், சக்திவேல், நடேசன் உள்ளிட்ட இளைஞர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். குரங்குகளுக்கு உணவு அளிக்கும் இந்த இரக்கமுள்ள இளைஞர்களுக்குப் பாராட்டுகளும் குவிகின்றன!