Published : 31 Mar 2020 01:39 PM
Last Updated : 31 Mar 2020 01:39 PM

பாதுகாப்பான முகக் கவசங்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?- முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் கையேட்டை வெளியிட்டது 

சார்ஸ் - சி.ஓ.வி.-2 கரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் பாதுகாப்பான முகக் கவசங்களை (மாஸ்க்குகள்) வீடுகளிலேயே எளிய முறையில் எப்படி தயாரிப்பது என்கிற கையேட்டை முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீட்டில் அடைந்து கிடந்தாலும் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்வதன் மூலம் நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால் சாதாரண முகக் கவசம் மருந்தகங்களில் கிடைப்பதில்லை. கிடைப்பதும் 100, 200 ரூபாய்க்கு விலை வைத்து விற்கப்படுகிறது. கைக்குட்டை கட்டிக்கொண்டு போவதால் பாதுகாப்பு இல்லை என்கின்றனர்.

அப்படியே பணம் கொடுத்து வாங்கினாலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் வாங்குவது சாத்தியமில்லை. இந்நிலையில் எளிய முறையில் வீட்டிலேயே முகக் கவசத்தைத் தயாரித்து துவைத்து அதை மீண்டும் பயன்படுத்தலாம். இந்த முகக்கவசங்கள் 70 சதவீதம் வரை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டிலேயே எளிய முறையில் முகக் கவசங்களை தயாரித்து எப்படி, கைக்குட்டையை முகக் கவசமாக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் கையேட்டை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“வீடுகளிலேயே முகக் கவச உறை தயாரிப்பதற்கான கையேட்டை 'சார்ஸ் - சி.ஓ.வி.-2 கரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான முகக்கவச உறைகள் (மாஸ்க்குகள்)' (Masks for Curbing the Spread of SARS-CoV-2 Coronavirus) முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தகவலை மேற்கோள் காட்டியுள்ள இந்தக் கையேட்டில், ஆல்கஹால் அடிப்படையிலான கை கழுவும் திரவங்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்வதுடன் இணைந்ததாக முகக் கவச உறை பயன்படுத்துவது மட்டுமே நல்ல பயனைத் தரும். நீங்கள் முகக் கவச உறை அணிந்தால், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எப்படி முறையாக அகற்ற வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் முகக்கவச உறைகள் அணிந்தால், அந்த 50 சதவீதம் பேர் மட்டுமே வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் முகக் கவச உறை அணிந்தால், உடனடியாக நோய்த் தொற்று பாதிப்பை நிறுத்திவிட முடியும் என்றும் அதில் தெரிய வந்துள்ளது.

ஏன் முகக் கவச உறை அணிய வேண்டும் என்ற பகுதியில், ''மனிதர்களில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடியதாக கோவிட்-19 வைரஸ் உள்ளது. தும்மல் அல்லது இருமலின்போது வெளியாகும் நீர்த் திவலைகள், வேகமாக உலர்ந்து திவலைக் கரு போல மாறி, காற்றில் மிதந்து கொண்டிருக்கும். இறுதியாக வெவ்வேறு மேற்பரப்புகளின் மீது படிந்துவிடும். கோவிட்-19 நோயை உருவாக்கும் சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ், காற்று மண்டலத்தில் மூன்று மணிநேரம் வரையிலும், பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேற்பரப்புகளில் 3 நாட்கள் வரையிலும் செயல் தன்மையுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது (N.Engl J.Med. 2020)'' என்று கூறப்பட்டுள்ளது.

நோய்த் தாக்குதலுக்கு ஆளான நபரிடம் இருந்து நீர்த்திவலைகளாக வெளிப்பட்டு இன்னும் காற்றில் மிதந்து கொண்டிருந்தால், அந்த வைரஸ்கள், மனிதனின் சுவாச மண்டலத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை இந்த முகக்கவச உறைகள் குறைக்கும் என்று கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பம், புறஊதா வெளிச்சம், நீர், சோப்பு மற்றும் ஆல்கஹால் கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்ட, பாதுகாப்பு முகக் கவச உறை அணிவதன் மூலம் சுவாசத்தின் மூலம் வைரஸ் உள்ளே போகும் வாய்ப்பைக் குறைப்பது, இந்த நோய்த் தொற்று பரவுதலை நிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த முகக் கவச உறைகளைத் தயாரிப்பது, பயன்படுத்துவது, மீண்டும் பயன்படுத்துவதில் உள்ள சிறந்த நடைமுறைகளை எளிமையாக விளக்குவதாக இந்த வழிகாட்டுதல் குறிப்புகள் உள்ளன. இதனால் என்.ஜி.ஓ.க்கள், தனிநபர்கள் இதுபோன்ற முகக் கவச உறைகளைத் தாங்களாகவே தயாரித்துக் கொண்டு, இந்தியா முழுக்க பரவலாக இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும்.

இதில் எளிதில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்துவது, வீட்டிலேயே தயாரிக்கும் எளிமையான நடைமுறை, பயன்படுத்துவதிலும், மீண்டும் பயன்படுத்துவதில் எளிய முறைகள் என்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முகக் கவச உறை அணிவது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

வீடுகளிலேயே முகக் கவச உறைகள் தயாரிப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் கீழே உள்ள இணையதள லிங்க்கில் விவரம் தரப்பட்டுள்ளன.

http://164.100.117.97/WriteReadData/userfiles/FINAL%20MASK%20MANUAL.pdf ''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x