

அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தை கரோனாவால் பாதிக்கப்படுவோர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்தை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் திமுக எம்எல்ஏக்கள் வழங்கினர்.
இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மார்ச் 31) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான அண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள, அரசு சார்பில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திமுக அறக்கட்டளையின் தலைவரும் மேலாண்மை அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இக்கடிதத்தை சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏவும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபுவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஜி.பிரகாஷிடம் நேரில் சந்தித்து அளித்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதச் சம்பளத்தை நிவாரணமாக வழங்குவார்கள் என அக்கட்சி அறிவித்திருந்தது. மேலும், திமுக அறக்கட்டளை சார்பாக, முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த நிதி, ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நேற்று முதல்வர் நிவாரண நிதிக்குச் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தை கரோனாவால் பாதிக்கப்படுவோர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.