Published : 31 Mar 2020 07:59 AM
Last Updated : 31 Mar 2020 07:59 AM

பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி ஆளுநர் புரோஹித் வழங்கினார்

கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணத்துக்காக பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிகளுக்கு தலா ரூ.1 கோடியை தன் விருப்புரிமை நிதியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் பரவு வதை தடுக்கும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு தோள்கொடுக்கும் வகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமரின் பொதுமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி மற்றும் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தனது விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.2 கோடியை வழங்கியுள்ளார்.

இதுதவிர, ஏற்கெனவே அறிவித்தபடி தனது ஒரு மாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நிலையில், பிரதமரின் பொதுமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதிக்கும் ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.

மேலும், பொதுமக்களும் தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுக ரூ.1 கோடி நிதி

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த் தடுப்பு பணிகள், நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. இந்த நிதி இணையதள பரிவர்த்தனை மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x