மருத்துவம் சார்ந்த பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில்

மருத்துவம் சார்ந்த பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில்
Updated on
2 min read

கரோனா வைரஸ் தொற்றில் தமிழகம் 2-ம் நிலைக்கு வந்துவிட்டதால், தனிமை ஒன்றே இந்த நோய்க்கு மருந்து என்றும், இப்பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப்பின், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுசெய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

மற்ற மாநிலங்களைப்போல் கரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் அதிகளவில் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறதே?

இது தவறான தகவல். மத்திய சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி, அறிகுறி இருந்தால்தான் ஆய்வுசெய்ய முடியும். 1,981 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்து, ‘பாசிடிவ்’ என வந்தால் தனிமைப்படுத்தி யுள்ளோம்.

தமிழகத்தில் வீட்டு வாடகை தொடர்பான அறிவிப்பு வருமா?

இது நாடு முழுவதும் உள்ள பொதுவான பிரச்சினை. மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் படிப்படியாக ஒவ்வொரு பிரச்சினையாக அரசு தீர்த்து வருகிறது. இந்த பிரச்சினையையும் அரசு கவனத்தில் கொள்ளும்.

மக்கள் வெளியூர் செல்வதற்கான அனுமதி பெறுவதில் சிரமம் உள்ளதாகக் கூறப்படுகிறதே?

இறப்பு, திருமணம் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி. எல்லோரும் செல்ல வேண்டும் என்றால் 144 தடை உத்தரவு அவசியமில்லையே. குடும்பத்தில் எவரேனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அதற்காகவும் அனுமதி வழங்க வேண்டும்என்றும் இன்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்க ளில் வட்டாட்சியர்களிடமே அனுமதி வாங்கிச் செல்லலாம்.

காய்கறி, மளிகை கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு எந்த அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது?

நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளோம். இது தொற்று நோய். அதிலும் கடுமையான நோய்.இந்த நோய் தடுப்பே தனிமைதான். தனிமையில் இருந்தால் நோயை தடுக்கலாம். தற்போது 2-ம் நிலைக்கு வந்துள்ளதால் இந்த நிலையிலேயே நோய் பரவாமல் தடுத்துவிட்டால் பிரச்சினை ஏற்படாது. மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சமூக விலகலை மக்கள் கடைப்பிடிப்பதை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

எவ்வளவுதான் சட்டம் போட்டாலும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். சட்டம் என்பது மக்களை துன்புறுத்த அல்ல; பய உணர்வை ஏற்படுத்தத்தான். நமதுநாடும், மாநிலமும் மக்கள் தொகைநிறைந்தவை. வரலாற்றில் இதுபோன்ற சம்பவத்தை சந்திக்கவில்லை. சவாலான இந்த நேரத்தில் படிப்படியாக மக்களை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில், மக்களின் ஒத்துழைப்பு ஓரளவு உள்ளது.

குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000வழங்கும் திட்டம் குறித்து?

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் கூட்டம் நடக்கிறது. பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் விநியோகம் குறித்தும் முடிவெடுத்து அறிவிக்கப்படும். அங்குள்ள நிலைமைக்கு தகுந்தபடி மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம்.

நிலவேம்பு குடிநீர் கொடுக்கப் படாததன் காரணம் என்ன?

வல்லரசு நாடுகளே இதற்கு சரியான மருந்தை கண்டுபிடித்து வெளியிடாத நிலையில், நோய் வந்தவர்கள் இதைச் சாப்பிட்டுவிட்டு, மருத்துவமனை செல்லாவிட்டால் சிக்கல் ஏற்பட்டுவிடும். அதனால்தான் கொடுக்கவில்லை. சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் மருத்துவமனையை அணுக வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேறு யாருக்கேனும் நோய் அறிகுறி உள்ளதா என்று பார்க்க வேண்டும். இது மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில், அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டவோ, அரசியல் செய்வதற்கோ அவசியமில்லை.

தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன?

ஈரோட்டில் 10 பேர், சென்னையில் 4, மதுரையில் 1, கரூரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். டெல்லிக்கு 1,500 பேர் குழுவாகச் சென்றுள்ளனர். அவர்களில் 981 பேர் வந்துவிட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை நடைபெற்று வருகிறது. இவர்களில் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் 24 பேர். இவர்களால்தான் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு உதவிசெய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதா?

தமிழகத்தில் வெளிமாநி லத்தவருக்கு என்னென்ன உதவிகள் செய்கிறோமோ, அதே உதவிகளை மற்ற மாநிலங்களும் செய்ய வேண்டும் என்று கூறி, அதற்கான செலவுகளை நாம் தருவதாகவும் கூறியுள்ளோம். இன்று மகாராஷ்டிராவில் 600 பேர் இருப்பதாக தகவல் வந்ததும், மகாராஷ்டிர முதல்வருக்கு தெரிவித்து உதவி செய்யுங்கள், செலவை தருகிறோம் என்று கூறியுள்ளோம். தமிழகத்தில்1 லட்சத்து 49 ஆயிரத்து 394 பேர் வெளிமாநிலத்தில் இருந்துவந்த பணி செய்து வருகின்றனர். இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் மட்டும் 32 ஆயிரத்து 469 பேர் உள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்களே மாத ஊதியம் பெறுபவர்களுக்கு உதவிசெய்கிறது. தினக்கூலி பெறுபவர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ வசதிகளை அரசு செய்து வருகிறது.

மின் கட்டணம் ரத்து செய்யப்படுமா?

ஒவ்வொன்றையும் ரத்து செய்தால் அரசின் நிலை என்னவாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அரசுக்கு தனியாக எங்கிருந்தும் பணம் வருவதில்லை. பொதுமக்களிடம் இருந்துகிடைக்கும் பணத்தை தான் செலவு செய்கிறது. இருக்கும் நிலைக்கு தக்கவாறு மக்களுக்கு அரசு உதவி செய்யும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in