

“கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்த முதல் நாளே ஓர் அழைப்பு. ‘நாளைல இருந்து பேப்பரும் வராதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம் ராமராஜ். ஆனா, நீங்க எதுவுமே நடக்காதது மாதிரி, சரியா 6 மணிக்கு பேப்பர் போட்டுட்டீங்க. உங்களுக்கும், உங்க பத்திரிகை ஆபீசுக்கும் நன்றி’ என்றார் போனில் பேசிய பெரியவர்.
உடனே, முத்துக்குமார் உள்ளிட்ட நாளிதழ் போடுகிற ஊழியர்கள் அத்தனை பேரிடமும் அந்தப் பாராட்டை பகிர்ந்துக்கிட்டேன்.
நாம் செய்வது எவ்வளவு முக்கியமான வேலை என்பதை உணர வைத்ததுடன், காவல்துறை கெடுபிடிகளையும் மீறி அடுத் தடுத்த நாட்களில் வேலைபார்ப்பதற்கான ஆர்வத்தையும் அந்த பாராட்டு தந்தது.
ரெண்டாவது நாள் ஒருத்தர் போன் பண்ணி, ‘இவ்வளவு நாளா சும்மா அறிபறியா பேப்பரை புரட்டிட்டுப் போயிடுவேன். இன்னைக்குத்தான் முழுசா உட்கார்ந்து படிச்சேன். பக்கம் குறைக்கப்பட்ட பேப்பரைப் படிக்கவே முழுசா 3 மணி நேரம் ஆச்சு. அடேங்கப்பா... ஒரு பேப்பர்ல இவ்வளவு விஷயம் போடுறீங்களான்னு ஆச்சரியப் பட்டுப் போனேன். தயவு செஞ்சி ஊரடங்குன்னு சொல்லி ‘தமிழ் இந்து' பேப்பரை மட்டும் நிறுத்திடாதீங்க தம்பி. இதுதான் வாசிக்கிறதுக்கான சரியான டைம்’ன்னு சொன்னார்.
அதேநாளில் வழக்கறிஞர் ஒருவர், ‘இப்பத்தான் உங்களோட வேலை எவ்வளவு கஷ்டமானதுன்னு புரியுது சார். உங்களுக்கும் பையன்களுக்கும் நானே மாஸ்க்கும், கிளவுஸும் ஸ்பான்சர் பண்றேன்’ என்றார். ‘இல்ல சார், அதெல்லாம் ஆபீஸ்லேயே கொடுத் திருக்காங்க’ன்னு சொன்னேன்.
‘பரவாயில்ல. ஒரு பத்திரிகை வெளிவர பலபேரு உழைச்சாலும், இந்த நேரத்துல உங்களோட உழைப்புதான் பெருசுன்னு நினைக்கிறேன். அதனால, என்ன உதவின்னாலும் கேளுங்க, செய்றேன். இது சலுகையல்ல, பிரதி உபகாரம்’ என்றார்.
ஒரு வாசகர், ‘என்ன இந்த மாசம் பேப்பர் காசு கேட்டு வரல. உங்களோட போன் நம்பர் குடுங்க ‘கூகுள் பே' வழியா அனுப் பிடுறேன். இந்த நேரத்துல பாக்கி வெக்க விரும்பல’ன்னு சொல்லி கண் கலங்க வைத்து விட்டார்.
வாசகர்கள் உள்ளுக்குள் வைத் திருந்த அன்பை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பாகத்தான் இந்த ஊரடங்கு! காலத்தை கருதுகிறேன்!” என்கிறார் கோவை யின் நாளிதழ் முகவர் ஆர்.ராமராஜ்.