Published : 31 Mar 2020 07:15 AM
Last Updated : 31 Mar 2020 07:15 AM

முதன்முறையாக செல்போனில் விசாரணை- கரோனாவுக்கு சித்த மருத்துவம் ஆய்வு செய்ய நிபுணர் குழு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார், ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவரான கே.எம்.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவசர பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:

உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா தாக்கத்துக்கு இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால்,சித்தா, ஆயுர்வேதம், யுனானிமருத்துவத்தில் இந்நோயை பரிபூரணமாக குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்ட முடியும். குறிப்பாக பாரம்பரியமான சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ராசெந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பலவகை மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாகஉட்கொண்டாலே கரோனாஉள்ளிட்ட எந்த வகையானவைரஸ்களும் அழிக்கப்பட்டு விடும். எனவே, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அதில் கோரியிருந்தனர்.

ஊரடங்கு உத்தரவின்படி உயர் நீதிமன்றம் மூடப்பட்டு இருப்பதால் இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் அவரவர் வீடுகளில் இருந்தவாறு செல்போன் வாட்ஸ்அப்-ல் உள்ள ஜூம் ஆப் காணொலி காட்சி மூலமாக நேற்று விசாரித்தனர். இதற்காக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன் அவரது வீட்டிலும், அரசு தலைமை ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவருடைய அலுவலகத்திலும் இருந்தனர். இதேபோல மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் கார்த்தீபன் அவரது வீட்டில் இருந்து வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில், ‘‘கரோனாவை சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் குணப்படுத்த முடியுமா என்பதைக் கண்டறிய மத்திய அரசு ஏற்கெனவே பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இதுதொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டது.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர். உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக செல்போன் மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x