

ஊரடங்கு காரணமாக வீடுகளுக்கு 500 யூனிட் வரை மின் கட்டணம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பரவியுள்ள தகவல் குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 2.14 கோடி வீட்டு மின் இணைப்பில், 72 லட்சம் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 500 யூனிட் வரை மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் நலன்கருதி வீடுகளுக்கு 500 யூனிட் வரை மின்கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து, மின்வாரிய அதி காரிகள் கூறியதாவது: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மின் கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி மட்டும் ஏப்.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், 500 யூனிட் வரை மின் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறா னது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.