Published : 30 Mar 2020 08:09 PM
Last Updated : 30 Mar 2020 08:09 PM

ஆந்திர மீனவர்களுக்கு உதவி: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் நன்றி

ஆந்திர மீனவர்களுக்கு உதவி செய்ததற்காக, தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு தமிழகத்தில் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

21 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பால், மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். தங்க இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் தங்களுடைய செல்போன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு, அவர்கள் மாட்டிக் கொண்டுள்ள மாவட்ட அரசாங்கத்திடம் உதவிகள் கோரி வருகிறது.

அவ்வாறு ஆந்திர மீனவர்களுக்கு உதவிடுமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆந்திர மீனவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக உதவியது.

இதனால் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பவன் கல்யாண். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

"நான் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது முறையீட்டு விண்ணப்பத்தின்படி, ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேட்டா மண்டலத்தில் கோலகண்டி கிராமத்திலிருந்து மீன்பிடிக்க தமிழக கடற்கரை எல்லைக்குச் சென்ற சுமார் 99 மீனவர்கள், கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவித்தவர்களுக்கு உடனடி மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் தனது அதிகாரிகளுக்கு அளித்த உத்தரவின் பேரில் அவர்களுக்கு போதிய தங்கும் வசதி மற்றும் உணவுப் பொருட்கள் அளித்துள்ளனர் என்பது தெரியவந்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சியின் அதிகாரிகளின் இந்த உடனடி மீட்புப் பணியில் களமிறங்கியதை அறியும்போது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.

எனது ஜனசேனா தொண்டர்கள் தகுந்த நேரத்தில் இந்த மீனவர்களைக் காப்பாற்றக் கோரியதும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வேண்டியதும், அவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டதும் மிகவும் பாராட்டத்தக்கது".

இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x